கவிஞர் இ.இசாக் அய்க்கூ கவிஞர் என அறியப்பட்டவர். தொடர்ந்து தொகுதிகள் தந்து கொண்டு இருப்பவர். அண்மை வரவுதான் 'மழை ஓய்ந்த நேரம்'. இந்த தொகுதியில் 112 கவிதைகள் உள்ளன. பக்கத்திற்கு பக்கம் ஒளிப்படங்களுடன் நூல் காட்சி இன்பமும் கவிதை இன்பமும் தருகிறது. படங்களை கவிதைக்கு பொருத்தமான காட்சிகள் என்று பாராமல் அவற்றை தனித்தனி காட்சிகளாகவே பார்க்கலாம். இசைவு தேடி ஏமாற்றம் அடையத் தேவை இல்லை. கவிக்கோ அப்துல் ரகுமான் தன் முன்னுரையில் இரவில் கிடைக்கும் இருள், பனித்துளி, கனவு போன்றவை அய்க்கூ என்று சொல்லி, விடிந்தால் காணாமல் போகும் இவற்றை ஒரு கவிஞன் தன் மொழியில் சேமித்து வைக்கும் அழகையும் அருமையையும் சொல்கிறார். இந்திரன் மற்றும் அறிவுமதியின் வரிகள், அய்க்கூக்களை ஆழமாக உணர உதவுகின்றன. இ.இசாக் தன் ஏக்கங்களின் தவிப்பின், எண்ணச் சிதறல்களின் சேகரிப்புதான் தன் கவிதைகள் என்று குறிப்பிடுகிறார். இந்தக் கவிதைகள் பொறுப்புள்ள இக்கால மனிதர் ஒருவரின் அக்கறைகள் யாவற்றையும் வெளிப்படுத்திப் பேசுவன. குறிப்பாக போர் காரணமாகவும் பிழைப்புக் காரணமாகவும் (மனிதருக்கு பிழைப்பும் ஒரு போராகத்தான் ஆகிவிட்டது!) மனிதர் படும்பாட்டை நெருக்கத்தோடும் உருக்கத்தோடும் வாசகர்களை நினைக்க வைப்பன. இசாக்கின் இந்த தொகுதி கவிதைகளில், வடலூர் இராமலிங்க வள்ளலார் மிகவும் வற்புறுத்தி வந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டை நாம் இனம் காண முடியும். அதுவே இந்த தொகுதியின் அடிநாதமாகவும் கோக்கும் நூலாகவும் இருக்கக் காணலாம். இது இசுலாத்தின் சாதனையாகவும் கவிஞர் இசாக்கின் வெற்றியாகவும் தோன்றுகிறது. மார்க்கங்கள் வற்புறுத்தும் மகா உண்மையான சீவ காருண்யத்தை மகா கவிஞர்கள் சரியாக இனங்கண்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறார்கள். கவிஞர் இசாக்கின் இளமைக்காலம், பின்புறம் ஏரியையும் முன்புறம் வயலையும் கொண்ட அழகிய கூரை வீட்டில் கழிந்தது. இந்த அனுபவம் கவிஞருக்கு உழவுமாடுகள், பசு-கன்று, காய்ந்த ஏரி, கருகிய வயல், வெயில், மழை, வியர்வை,ஏமாந்து திரும்பும் பறவைகள்,பசியால் வாடும் விவசாய குடும்பம், குருவிக்கூடு, கூரை, பொன்வண்டு, எறும்பு... எனக் கவிதைப் பொருள்கள் ஆகியுள்ளன.

'ஆள்கள் மாறிக் கொள்கிறார்கள்
அய்யோ பாவம்
உழவு மாடுகள் ' -
என்று எழுதுவது பொதுவான பார்வை என்றால்,

'எப்போதும் இருளாய்
மின் கம்பிகளில்
குருவிக்கூடு
' -என்றும்,

'ஊர்திப்புகை
மூச்சுத் திணரும்
செடிகள்
' - என்று இயற்றுவது சமகாலப் பார்வையாக இருக்கின்றன.

'சாய்ந்தது மரம்
நின்றது மழை
ஈரமில்லாத மனிதன்
'- என்பது, தன் ஊரை கவனிப்பது என்றால்,

'பாலைவனச் சூடு
நெடுந்தூரப்பயணம்
எங்கே இளைப்பாறும் நிழல்?
' -என்பது தன் உலகை கவனிப்பதாகும்.

'சமாதிக்கு மட்டுமன்று
பூக்களுக்கும்
மலர் வளையம்
'- என இரங்கும் கவிஞரின் ஆன்ம நேயம்,

'இணை தேடி வருமா
காணமல் போன
கொலுசு
' -என்று ஏங்குகையில் ஓர் உயரத்தை எட்டுகிறது.

'திருவிழா வாணவேடிக்கை
பயந்து பறக்கிறன
புறாக்கள்
'- இந்தக் கவிதையில் மொக்கு அவிழும் கவிஞரின் உயிர் இரக்கம்,

'விபத்துக்கு உள்ளாகி நிற்கும்
பேருந்து முழுக்க
புளியம் பூக்கள்
' -எனும் கவிதையில் கசிந்து கண்ணீர் மல்குகிறது.

சமாதியில் மலர்களைத் தூவி நிற்பது மக்கள் பண்பாடு. இங்கே விபத்துக்குள்ளான பேருந்தின் மேல் பூக்களைத் தூவி நிற்பது மரங்களின் பண்பாடு. மனிதரை வெல்லும் மரங்கள்!. இசாக் புலால் உணவினராக இருக்கலாம். அது ஒருவரின் உணவு பழக்கம். இசாக்கின் இதயம் ஒரு அருளாளரின் இதயம். அது அவர் உணர்வுப் பழக்கம். கவிஞர் இசாக்கின் இந்த இதய நெகிழ்ச்சியும் உள்ள உருக்கமும் அவர் பின்பற்றும் மார்க்கத்தாலும் பிறந்த மண்ணாலும் வந்தவை. இவற்றை வெளியிடும் பண்பாடும் படைப்பும், பெருமிதத்திற்கும் உரியன.

Pazhamalai

நன்றி: துவக்கு

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01 00:00
pictPath
/2005/r/rev_ishaq_jul05L.jpg
Share with others