வார்ப்பு நூல்விமர்சனம் பகுதிக்கு : விமர்சனம் எழுதியவர் :நா.முத்து நிலவன்.
'பிரவாகம்' -கவிதைத்தொகுப்பு விமர்சனம்
தடம் பதிக்கும் த.மு.எ.ச. கவியரங்குகள்!
1980களில், "கவிதைத் தொகுப்பா? ம்ஹீம்! ஓடாது" என்றுசொன்ன பதிப்பகத்தார் ஏராளம்! பெண்ணியக் கவிதைகள், மற்றும் தலித்தியக் கவிதைகளின் சூறாவளி போன்ற சுழல்வரவாலும், த.மு.எ.ச.போலும் பல சமூக உணர்வுள்ள இலக்கிய அமைப்புகளின் தொடர் நிகழ்வுகளாலும், 90களின் துவக்கமுதல், இன்றுவரை, தொடர்ந்து முன்னேறி, வெற்றிகரமாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புகள்தான் எத்தனை! எத்தனை! கலைஞர் மு.கருணாநிதி முதற்கொண்டு,ந.பிச்சமூர்த்தி, இன்குலாப், தணிகைச்செல்வன், கல்யாண்ஜி, இரா.மீனாட்சி, கந்தர்வன், வைரமுத்து, வைத்தீஸ்வரன், ராஜமார்த்தாண்டன், ஞானக்கூத்தன், முருகுசுந்தரம், பொன்னீலன், பிரம்மராஜன், உமாமகேஸ்வரி, தங்கம்மூர்த்தி, வல்லம்தாஜுபால் போலும் பிரபலமான கவிஞர்களின் மொத்தத் தொகுப்புகள் வெளிவந்தன. ரூ.100, 200, 300 என்று விலைவைத்த போதிலும், அவற்றில் சில மறுபதிப்பும் கண்டன! உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, உருவ மற்றும் வெளிப்பாட்டு -(Printing Technology)- வளர்ச்சியிலும், தமிழ்க்கவிதை மிக உயரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே வரலாறு கூறும் உண்மை!
மு.மேத்தாவின் "கண்ணீர்ப் பூக்கள்" தொகுதி, -ஆகஸ்டு2004 இல்- 25 ஆவது பதிப்புக்கான வெளியீட்டுவிழாக் காண்பது ஒன்றும் சாதாரணசெய்தியல்ல! தமிழ்க்கவிதை மகுடத்தில் வரலாறு செருகும் ஒரு வண்ணச்சிறகு அது! "தமிழ்க் கவிதை மீண்டும் தன் நல்ல காலத்தை மீட்டெடுத்துவிட்டது" என்பதன் அடையாளம்தான் இது! "1990களில் இருந்து, வளர்ந்துவரும் இந்தத் "தற்காலம்தான் தமிழ்க்கவிதையின் பொற்காலம்" என்று நான் (29.04.2001-தினமணிக்கதிர் நேர்காணலில்) கூறியது பொய்யில்லை என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக, இதோ ஒரு 'பிரவாகம்' வந்திருக்கிறது
"கவியரங்கம் நீர்த்துப்போய்விட்டது", "இனி நல்ல கவிதைகளை மேடையில் காணமுடியாது" என்று அங்கலாய்த்தவர்களும் உண்டு! ஆயினும்,பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்கூடும் "கலைஇரவு"களில் வெற்றிகர மாக கவியரங்கத்தை நடத்திக் காட்டித் தடம் பதித்துவருகின்றது-த.மு.எ.ச.!1997ஆம் ஆண்டு இந்தியச் சுதந் திரத்தின் பொன்விழாவை ஒட்டி,"50 கவிஞர்களின் 50 கவிதைகள்" கவியரங்கத்தை நடத்திய அனுபவத்தோடு, 2000இல் "வருக2000" எனும் 100 கவிஞர் பங்கேற்ற 'மகா'கவியரங்கத்தை நடத்தியது புதுக்கோட்டை த.மு.எ.ச.!
இதில் வேகம்பெற்ற கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், 111 கவிஞர்கள் பங்கேற்ற 'மாபெரும்' கவியரங்கத்தைக் கோவையில் 9 மணி நேரம் நடத்தினர்! "மகா கவியரங்கம்-2001" எனும் பெயரில் அது தொகுப்பாகவும் வந்திருக்கிறது! 12.01.2002 அன்று, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்,13 மணி நேரம் (காலை 10 மனிக்குத் தொடங்கி, இரவு 11 மணிவரை, மதிய உணவு இடைவேளை கூட இல்லாமல்)- 20 தலைப்புகளில் 202 கவிஞர்களைக் கொண்டு, மாபெரும் கவியரங்கம் நடத்தி - 'தினமலர்' நாளிதழ் எழுதியது போல, 'கின்னஸ் சாதனை' செய்த புதுக்கோட்டை த.மு.எ.ச., அதையும் 'கவிதைப் பயணம்' எனும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து 2003இல், 101 கவிஞர்கள் பங்கேற்ற "மதவெறி எதிர்ப்பு மகாகவியரங்கம்" நடத்தி, அதனை, அண்ணல் காந்தி பிறந்த நாளில் தொகுப்பாகவும் வெளியிட்டது பாண்டிச்சேரி மு.எ.ச.! இந்தக் கவியரங்குகள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் சில நூறு கிளைகளிலும் மாதாமாதமும் இலக்கியக்கூட்டங்கள் நடத்துவதும், கலை இரவுகளில் தவறாமல் கவிதை வாசிப்புகள் இடம்பெறுவதும் தொடர்ந்து நடக்கின்ற போது, கவிஞர்களின் எழுச்சிக்குக் கேட்கவேண்டுமா என்ன? அப்படியான கவியரங்குகளைத் தொகுக்கும் பணியில் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கும் சேலம் மாவட்டத் த.மு.எ.ச. நண்பர்கள் "பிரவாகம்" எனும் அருமையான கவிதைத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார்கள். - சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த 19 கவிஞர்களின் 44 கவிதைகளடங்கிய சிறிய தொகுப்பாக! இந்திய அணுகுண்டுச்சோதனைக்கான சங்கேதச் சொல்லாக "புத்தன் சிரித்தான்" என்னும் வாசகத்தை வைத்திருந்தார்களாம்! அதைச்சொல்லாமல் சொல்லும் மா.அசோகனின் கவிதை ஆழ்ந்த பொருளுள்ளது:
'புத்தன் அழுதான்
போதிமரத்தையாவது
விட்டுவைத்திருக்கக் கூடாதா என்று'
-எனும்போது, அணுயுத்தநினைவே நெஞ்சில் அறைகிறது!
எத்தனை கோயில்களில், எத்தனை பூஜைகள் செய்தென்ன? எத்தனை வேள்விகள் செய்தென்ன? -
'இன்னும் அணையாமல்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது-
பாதத்தில் பிறந்த பலரது வயிறுகள்!'
-என இமயபாலன் சொல்லும்போது, (ஆ)சாமிகள் மீது(ம்) கோபம் வருவது உறுதி! பாரதியின் சாகாவரம்பெற்ற 'தேடிச்சோறு..' கவிதைபோன்றதொரு புதுக்கவிதையைத் தந்திருக்கிறார் - கி.சரவணக்குமார்.நாய்,மாடு,ஆடு,மீன் எல்லாம்தான் சாகின்றன, மனிதன் எப்படிச் சாகவேண்டுமாம் தெரியுமோ?
'வழியெங்கும் பசுமையூட்டி
அமைதியாய்ச் சென்று
கடலில் முடியும்
நதியன்றின் சங்கமம் போல
நிகழவேண்டும் மனிதமரணம்!'
ஆழம் மட்டுமல்ல நுட்பமும் கைவந்திருக்கிறது இந்தக் கவிஞர்களுக்கு என்பதற்கு எடுத்துக்காட்டாக சு.சரவணமணியன் கவிதைகளைச் சொல்லலாம். 'மரியாதையும் அன்பும் அங்க அசைவுகளில் உடனுக்குடன் தேவைக்கேற்ற விகிதங்களில்' -காட்டும் சிலரைக் காணும்போது இவரது கவிதை இனி நினைவுக்கு வரும்! இவரது 'ஆசைகள்' கவிதையையும், தி.ஜெயமுருகனின் 'பயிலகம்' கவிதையையும் கல்விக்கூடங்களில் எல்லாரும் பார்க்க பெரிதாக எழுதிப் போடவேண்டும்!
'மகன் சோறு போடுவானா? மனைவியின் பணிவிடைகள் தொடருமா?' என்பதான முதுமைக் கேள்விகள் தான்
எத்தனை! எத்தனை! அத்தனை கேள்விகளையும் அடுக்கிவிட்டுக் கடைசியில்,
'இப்படியாகக் கேள்விகள்
கீழ் நோக்கி இழுக்க
முதுமையில் முதுகு
கூன் ஆவதில் வியப்பென்ன?'
-எனும் வர்யநிலாவின் பதில் சுவையானது. 'பிச்சைபுகினும் கற்கைநன்றே' என்றாள் ஒளவை! கற்றபின் வேலைகிடைக்காத ஒருவன், 'பிச்சைநன்றே' என்றான்! இப்போதைய கல்வி 'குலத்தொழிலில்' கொண்டுபோய் விடுவதாகக் கூறும் செஞ்சுடர்,
'பட்டதாரி அண்ணனுக்கு
எங்கள் குலத்தொழில்
வேலை கிடைத்தது-
ஒயின் ஷாப்பில்'
-என சமூகக்கேவலத்தை எதார்த்தக் கவிதையாக்கி இறுதியில் அதிர்ச்சியூட்டிவிடுகிறார். ''எனக்கு உங்களைப்போலப் பேசவராது'-என்று (தன்)அடக்கமாகக் கூறிக்கொள்ளும் சேலம் மாவட்டத் த.மு.எ.ச. தலைவர் ஷேக் அப்துல்லா,அருமையான 3கவிதைகளை எழுதியிருப்பது, அதிர்ச்சிதரும் மகிழ்ச்சிதான்!
'கீழத்தெருவான் கீழ்ச்சாதிக்காரன்
என்ற பரிகாசத்திற்குப் பரிகாரமாய்
தாடிவைத்து தொப்பிவைத்து
வாங்க பாய் என்று
எல்லோரும் அழைத்தபோது
அகமகிழ்ந்து போனார் என் முப்பாட்டனார்!
நாலு தலைமுறை கடந்துபோச்சு
முன்பாவது தனித்தெரு தனிக்கிணறு!
இப்போதோ அவர்கள்
ஆயிரம் மைலுக்கப்பால் தள்ளிப்போ!
அங்கே இருக்கிறது
துரைமார்கள் உனக்கு
பிரித்துக்கொடுத்த இடம்
என்கிறார்கள்'
-என்னும் ஷேக் அப்துல்லா கவிதையையும்,
'பக்கத்து வீட்டு
ஏசுமரியான் இறந்ததற்காக
ரம்ஜான் பிரியாணிசெய்யவில்லை
அலிக்குட்டி பாய்!
- என்னும் காவேரிதுரை கவிதையையும், மதவெறியர் அனைவர்க்கும் அனுப்பவேண்டும்! நல்ல கவிஞரும் விமர்சகருமான டாக்டர் பாலா, நல்ல கவிதைக்கான அடையாளமாகக் கூறும் புகழ்பெற்ற வாசகம் ஒன்றுண்டு: "நல்ல கவிதை, நம்மை மறக்கவிடாமல் நம்மோடு ஞாபக யுத்தம் செய்யும்"! சத்தியப்பிரியனின் கவிதை இதற்கு மிகவும் பொருத்தமாக நம்மை மறக்கவிடாது :
'பலமுறை தோற்றுவிட்டேன் -
தெருவோரம் விற்ற
புல்லாங்குழலின் இசையை
வாங்கிய புல்லாங்குழலில்
இசைக்க!
வளரும் கவிஞருக்கு வளர்ந்தேயாக வேண்டிய ஒரு குணம் நிகழ்வுகளை நுட்பமாகக் கவனிப்பது. அப்படிக் கவனித்து நேர்த்தியாக அதை வார்த்தைப் படுத்தியிருக்கும் ஸ்ராதேவியின் வரிகள் வியக்கவைக்கின்றன!
'காக்கை விரட்டும்
கம்பு தட்ட
வாசலில் நறநறக்கிற
மணலின் நெறிப்பு...
அனைத்திலும் இருக்கிறது
கொள்ளுப் பாட்டியின் இழப்பு'
தாராவின் 'குழந்தைகள்' கவிதையும், விருதைதுரைப்பாண்டியின் 'தேடுதல்' கவிதையும் நன்றாக இருந்தாலும் அவற்றுக்கான கவிதைத் தலைப்புகளை இன்னும் பொருத்தமாக வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.
இந்த நல்லகவிதைகளைத் தொகுக்க, இரவீந்திரன்,சசிகலாவுடன் இணைந்து பணியாற்றியதோடு ஆழமான ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார் சஹஸ். அழகான முன்னுரைக்காக கவிஞர் க.வை.பழனிச்சாமியையும், அருமையான அச்சுக்காக மாவட்ட த.மு.எ.ச. நிர்வாகிகளையும், நிச்சயம் பாராட்டலாம்.
'பிரவாகம்'
(19 கவிஞர்களின் 44 கவிதைகள்)
பக்கம்:50, விலை: ரூ.30.
வெளியீடு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
71, அருணாசல ஆசாரி தெரு,
சேலம் - 636 001
செல்பேசி:91-94432-26425.