நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
.....
மனசுள் இறங்கும் இந்த வரிகளின் சாத்தியங்கள் எங்கள் மண்ணில் நிகழ்ந்தவைதான், நிகழ்பவைதான். வாழ்வின் மீதான எளிய பாடல்களாய் அவை கலந்தவை. தமிழினத்தின் போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை மறுக்காத அல்லது மறைக்காத மனசுகளுக்கு இவை எளிய பாடல்களாய் ஒலிப்பவை. தழிழையே தாய்மொழியாக தமிழ் மண்ணையே சொந்த மண்ணாக உணர்விலும் கலந்த முஸ்லிம் மக்களின் நிலையில் நின்று பேசும் கவிஞனாக மஜீத் உலவுகிறான்.
பலவகைக் கலவை உணர்வுகளின் இடைவிடாத தீவிரக் கொந்தளிப்புகளின் வெளிப்படுகை கவிதை என தன்னுரையில் குறிப்பிடும் மஜீத் இனை அவரது கவிதைகள் காவிவருகின்றன. உணர்வுகளின் வீச்சமாய் மொழி கொந்தளிப்பு அடைகிறது அவரது பல கவிதைகளில். மனிதாபிமானத்தின் மெல்லிய இழைகளில் நடப்பவனாய், இடைவிடாத துயரங்களின் தவிப்புக்கு உள்ளாகுபவனாய், மனிதத்தை நேசிப்பவனாய், வாழ்வின் நிச்சயமற்ற நிலைகளில் சிக்கித் தவிப்பவனாய்... கவிஞன் வந்துவந்து போகிறான்.
பன்னிரண்டு நேரத்தில் கடத்திடும் பகலை வெயில்
ஆசையாய் வளர்த்த பறவை பறந்த பிறகு
உதிர்ந்து கிடக்கும் சிறகுகள் மீது வருமே
அதிகமான நேசம்
அதுபோன்றே வெயிலின்மீதும் எனக்கு
என நேசம் கொள்ளும் அவன் அதே கவிதையில்,
பாதம் கொப்பளிக்க எரியும்
மணல்திட்டாய் மாறுகையிலும்
செல்லமாய்க் கோதித் தடவிடும்
புற்கள்
வாடிக் கருகையிலுமே அவதி
வெயிலின்மீது சொல்லொணாத எரிச்சல்
என பாடவும் முடிகிறது மனிதத்தின் சாட்சியாய். ஒரு விசுவாசியாய் தவறுகளை சரிகளின் குப்பைமேட்டுக்குள் இலகுவாய் வீசிவிடுவதில் மனிதம் தழைத்துவிடுவதில்லை. இந்தத் தவறை கவிஞன் செய்வதாயில்லை.
சகோதர மனிதனே
என் சுதந்திரங்களை
விலங்கிட்டாலும்
நசுக்கி நாய்க்குப் போட்டாலும்
காயவைத்து
இறப்பில் சொருகினாலும்
...
என் கவிதையுள்
கருக்கட்டும் சுதந்திரம்
என்று பிரகடனம் செய்கிறான்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சம் கொண்டு நியாயம் தேடிய காலகட்டத்தில் காத்தான்குடிப் பள்ளிவாசலினுள் தொழுகையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழப் போராளிகளாலே இரத்தவெள்ளத்தில் அமிழ்த்தப்பட்டார்கள். இராணுவத்தின் கோவில்கள் மீதான குண்டுவீச்சுகளுக்கும் மடுமாதாமீதான தாக்குதலுக்கும் புனித ஸ்தலங்கள் என்ற அளவுகோலில் நின்று இன்றுவரை குரல்கொடுக்கும் பல மனிதாபிமானிகளுக்கு இந்த காத்தான்குடிப் பள்ளிவாசல் இரத்தச் செய்திக்கு வேறு அளவுகோல்கள் தேவைப்பட்டதோ என்னவோ அடக்கியே வாசித்தார்கள், வாசிக்கிறார்கள். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்ட யாழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து தமிழ்ப் போராளிகளால் வெளியேற்றப்பட்டார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் நடாத்திமுடிக்கப்பட்டது. இருளை மூளைக்குள் திணித்தபடி அகதியாய்ப் போயினர் அவர்களும். இப்படியே அவர்களை தமிழ்ப் போдனவாதமும் ஒடுக்கியது. அடக்குமுறைக்கு எதிராக போராடும் இனம் தன்னுடன் வாழும் இன்னொரு இனத்தை அடக்கியாள்வதை சகித்துக் கொள்கிற நிலை. அதனால்தானோ என்னவோ சகோதர மனிதனே என்று விழித்தபடி வருகிறான் கவிஞன்.
இந்தக் கவிஞன் அகதியாய்ப் போகிறான்.
இந்தத் தேசத்தை விட்டும்
இங்கேயிருக்கும் தாவரங்களையும்
பூக்களையும்
புல்பூண்டுகளை விட்டும்
மிருகங்களையும்
எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும்
நான் போகிறேன்
எனது இதயத்திற்கும்
உங்கள் இதயத்திற்கும்
துгரமென்று விலக்கிவிட்டீர்களே
அதனால் போகிறேன்.
...
நான் பிடித்த தும்பிகளே
வண்ணத்துப் பூச்சிகளே
இந்தக் காற்றில் கலந்திருக்கும்
நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே
நான் போகிறேன்
என்றபடி இந்த அநியாயங்களுக்காக கண்ணீர்வடித்த மனிதர்களிடமும் விடைபெற்றுப் போகிறான். அதே கவிதையில்,
இடிவிழுந்து புயல் அடித்து
தூள்தூளாய்ச் சிதறி இந்தத் தேசம்
மண்போல் போகட்டுமென்று
என்னால் சாபமிட முடியாது
எனது நாகாжகம் வேறு
நான் போகிறேன்
என மனிதமாகிறான் கவிஞன். போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர் பலர். இதற்குள் நின்று இந்தக் கவிஞனின் உணர்வை வகைப்படுத்துவது ஒன்றும் போராட்டத்துக்குச் செய்யும் தொண்டல்ல. மாறாக தவறுகளுக்கு துணைபோனவர்களாகவே வரலாறு காண்பிக்கும்.
தலையைக் கொத்தி மூளை குடி
வறுத்துண்ணு
விரும்பின் எலும்புகளையெல்லாம்
சேர்த்து சூப்புக் காய்ச்சலாம்
...
மொத்தத்தலிது ஈழமில்லை
சாдகாணின் பிணங்கள் கண்டதும்
காகங்கள் பூக்கும் தென்னை.
பாறையைப் பிராண்டும் அலைகளின் வடிவாய், அடக்கப்படுதலின் தடுப்புச் சுவர்களை இந்தக் கவிதை வரிகளும் பிராண்டுகின்றன. போராட்டத்தின் நியாயங்களை எந்தக் கவிதையும் சீண்டவில்லை. உச்சமாக அவன் எமது தேசத்தை ஆக்கிரமித்தவர்களை நோக்கி வருகிறான் இந்தக் கவிதையில்...
இன்று எனது பிறந்தவீடும்
தாய்நிலமும்
உன்னிடம் உனது படையிடம்
பறிபோயிருக்கலாம்
இன்னும் கடல் தள்ளும் அலையினூடே
றப்பர் டையர்களினூடே
நீளமான வாவிகளினூடே
பதுங்குகுழியினுгடே
போராட்டம் குறித்த காயங்களோடும்
கனவுகளோடும்
எனதையும் நீ ஒதுக்கிவிடலாம்
உண்மையிலேயே யாரையும் யாரும்
காப்பாற்ற முடியாதும் போகலாம்
ஆனால் இவைகளுக்கப்பாலும்
இரவின் துவாரம் கிழிந்து
இன்னொரு இரத்தக் கட்டியை உதிர்த்தும்
அது உன்னையும் உனது படையையும்
எனது மண்ணிலிருந்து விரட்டியடிக்கும்.
என முடிக்கிறான் கவிஞன்.
தன்னைவிட்டுப் பிரிந்தவளோடு பேசுகிறது ஒரு கவிதை...
என் உச்சந்தலையில்
நீ கொளுத்திவிட்டுப் போன நெருப்பில்
சமுத்திரங்களைக் கவிழ்த்தாலும்
தணியாது
....
என் மூளையின் மணல்வெளியில்
மலைகளை வளர்த்துவிட்டு
வெடிவைத்து
தகர்த்துவிட்டுப் போயிருக்கிறாய்
என்று துயருறுகிறேன். அதிர்ச்சிதரும் படிமங்கள். காதல் உணர்வின் மெல்லிழையில் பாரமற்று நடந்து திரிந்த தனது நாட்களை அவன் மறந்துவிடுவதாக சொல்கிறான். கவிதையில் இந்தச் சொல் ஏற்றப்பட்டாலும் கவிதை அவனது உணர்வையே சுமந்து செல்கிறது. இது வாசகனின் மீதும் துயரை தொற்றவைக்கிறது. அவன் சொல்கிறான்...
நான் மறந்துவிட்டேன்
என் சதையெங்கும்
ஊடுருவவைத்த இன்பங்கள்
ஒரு கொடியில் மணக்கும்
பூக்களைப் போல்
மிக அழகாக பூத்துக் கிடந்ததையும்
முயல்கள் துள்ளி விளையாடும்
புல்வெளியைப் போல்
பசுமையாய் விரிந்து கிடந்ததையும்.
இந்தக் கவிதை அவனது மென்னுணர்வுகளை பூத்துநிற்கிறது.
இப்படியே மனிதத்தை நேசிப்பவனாகவும் கொடுமைகளின்மீது தாக்குதல் தொடுப்பவனாகவும் போராட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டவனாகவும் சிலபொழுதுகளில் நம்பிக்கைகள் தளர்ந்த மனிதனாகவும் பரிதாபத்துக்கு உரியவனாகவும்கூட முரண்பாடுகள் கொண்ட உணர்வுநிலைகளில் உலவுகிறான். எழுத்துக்களில் தனது அகவிருப்பு வெறுப்புகளை சாதிப்பவனாக அன்றி எலும்பும் சதையும் கொண்ட மனிதனாய் நின்று பேசுகிறான். இதனால் அவனது கவிதைகளால் நாம் காவப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். ஒற்றைச் சிறகு முளைத்தவர்கள் பறக்கமுடியாது, கவிதையின் வெளியை எட்டமுடியாது.
என்னருகில் வீழ்ந்த அழகின் முட்டை என்ற கவிதையில்...
வானிலிருந்தோ அன்றி
புல்லிதழுக்கும் தண்டுக்குமிடையிலுள்ள
இடுக்கிலிருந்தோ
என்னருகில் வீழ்ந்தது
அழகின் முட்டையொன்று
...
ஒரு கணத்துப் புன்னகைபோல்
உள்ளத்தின் கடைசித் தட்டில்
எடுக்கமுடியாத சுரங்கப் பகுதியில்
எடுத்தாலும் முழுமையாய் வரமுடியாத ஆழத்தில்
பதிந்துவிட்டது
...
அழகின் முட்டைபற்றி சொல்கிறேன்
எல்லாப் புலன்களின் இயக்கங்களும்
எனக்குள்ளே நுழைந்து இறங்கிவிட்டன
எனக்கு வெளியே விட்டுவிட்டு
கற்பனைகளைப் பின்னிப் பூக்கள்செய்து
பூக்கூடையில் உறங்கும் அழகின் முட்டை
ஒவ்வொரு நாளும் என்னுள்,
இப்படி எனக்குள்ளே வசித்தேன் பலவருடம் நான்.
...
அழகின் முட்டையின் மேல் கால்
போட்டுறங்குவதும்
விரல்களைப் பிடித்துக்கொண்டு
மூளையிலிருந்து இதயத்திற்கும்
இதயத்திலிருந்து தோலுக்கும்
நரம்புவழியே சுற்றித் திгдவதே வேலையாய்ப் போச்சு.
...
என தொடர்கிறது கவிதை. இந்தக் கவிதை மொழியழகு செய்கிறது. தன் முகத்தில் சாயம் பூசியும் வாசனை தடவியும் கொள்கிறது. அழகுதான். ஆனால் உணர்வை தொற்றுவதாயில்லை.
இருபத்தைந்துக்கு மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட சிறிய தொகுப்பாக (58 பக்கங்கள்) வெளிவந்திருக்கிறது. 2000 செப்ரம்பர் இல் விடியல் பதிப்பகத்தால் இத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. முப்பதுகளைத் தாண்டாத இளைஞர் மஜீத். யுத்தப்பட்ட தேசத்தின் துயர்ப்பாடுகளுக்குள் சிக்குண்டு வாழும் மனிதன் அவன். அதனால் கவிதையின் வாдகளுள் தனது உணர்வுகளை அதிர்வுடன் பதிவுசெய்கிறான், புதைந்துகொள்கிறான் என்றுகூடச் சொல்லலாம்.
தொகுப்பின் முதலில் வரும் ஒருசில கவிதைகள் (கோடுகள் பின்னிய வெளி, என்னருகில் வீழ்ந்த அழகின் முட்டை என்ற கவிதை முழுமையும்) சோலைக்கிளியை நினைவுபடுத்துகின்றன. இந்தக் கூற்றை சோலைக்கிளியின் பாணி என்று மொழிபெயர்த்துவிடுவது சரியல்ல. பாதிப்பு இருந்திருக்கலாமோ என்று ஒரு ஆரம்ப ஊகத்தை மட்டுமே விட்டுச்செல்லக்கூடியதாக இருக்கிறது. மற்றைய பெரும்பாலான கவிதைகளில் இந்த வாசனை இல்லை. ஒரு முறிவுபோன்று வீச்சானவையாய், உரத்துப் பேசுபவையாய் சிலசமயங்களில் மனஉளைச்சலாய் வரும் வரிகள் தனித்துவமானவையாகவே நிற்கின்றன. அற்புமான கவிதைகளாக தொகுப்பின் கடுகளவை மீறி விரிகிறது வாழ்வின்மீதான எளிய பாடல்கள்.
- ரவி (சுவிஸ்)30503