தளத்தில் கவிதையை வாசித்ததும் கவிஞரின் பெயர் தேடினேன். கத்துக்குட்டி, சற்று வித்தியாசமான பெயர்தான். வித்தியாசம் சிந்தனையிலும் தெரிந்தது. கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அழகாக, ஆழமான கருத்தோடு அற்புதமான வார்த்தைகளால் பின்னப்பட்டிருந்தது. மேலும் கவிதைகள் தேடினேன் கிடைத்ததென்னவோ மூன்று முத்தான கவிதைகள் மட்டுமே.
ஒருமுறைதான் காதல் வரும், அதுவும் முறிந்தால் தற்கொலையுமும், தேவதாஸ் கோலங்களும் இந்திய துணைகண்ட சினிமா கற்றுத்தந்த பாடங்கள். இன்னும் அதை முற்று முழுதாக நம்ப அல்லது நம்பி இருக்கிறார்கள். இங்கே கவிஞர் முதற்காதலின் தோல்வியை இலாவகமாக தட்டிக்கொண்டு மீண்டும் இன்னோர் உயரில் உயிர் வைக்க ஆயத்தமாகிறார். மேலோட்டமாக பலர் இக்கருத்தை மறுத்தாலும் அதுதான் உண்மை.
'உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்'
காதலைப் பொறுத்தவரையில் மறத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மறந்துவிட்டேன் என்று பொய்யாக நினைவுகளை மறைத்து வைத்துக்கொள்ளலாம். இன்னொரு காதல் எல்லோருக்குமே சாத்தியமான ஒன்றே. சமூக கட்டமைப்பும், இலக்கியங்களுமே காதலைப் பற்றிய புரிந்துணர்வை மாற்றியமைக்கிறது.
அடுத்த கவிதையில் காதலனோ,காதலியோ முதற்காதலைப் பற்றி தற்போதய காதலிக்கோ, காதலனுக்கோ சொல்லிக்கொள்வதாக கவிஞர் எழுதுகிறார். எமது பண்பாட்டைப் பொறுத்தவரையில் காதலியின் முந்திய காதலை ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெரும்பாலும் ஆண்களுக்கு வரவில்லை. காதலி என்பவள் தன்னை அவளின் முதற் காதலனாக ஏற்கவேண்டும் என்பதில் ஆண்கள் மிகவும் தீவிரமாய் இருக்கிறார்கள். ஆனால் கவிஞர் ஒரு மேலைநாட்டு சமுதாயத்தை நோக்கி தனது கற்பனையை எடுத்துச்செல்கிறார்.
'ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
----
----
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது'
காதல் முறிந்துபோனால் எல்லாமே வெறுக்கும். வாழ்வே அர்த்தமற்றதாகத் தோன்றும். இதயம் பூட்டியிருந்து தூசி படிந்து விட்டதாகக் கவிஞர் கூறுகிறார். இப்பொழுது புதுக்காதல் ஆகவே அது குடிபூரலுக்கு ஒப்பானதென்று கூறுகிறார். நல்ல கற்பனை. மௌனம், காதலில் ஒரு சிக்கலான மொழிப்பிரயோகம். நிறைய அர்த்தங்கள், நிறைய குழப்பங்கள், நிறையப் பிரிவுகள். எல்லாம் அதற்குள் அடக்கம்.
காதலில் தோற்றுப்போன ஒரு மனிதத்தின் புலம்பல் வெகு விமரிசையாக வடிக்பட்டுள்ளது. விதி என்பது அடிக்கடி எல்லாத் தோல்விகளுக்கும் பரிகாரம் ஆகிவிடுகிறது. ஒரு மனிதன் தோல்வியில் துவண்டுபோய் விடக்கூடாது என்பதற்காக விதியின் விளையாட்டு அது உன்னுடைய தோல்வியல்ல என்று மனிதனை மனிதன் தேற்றிக்கொண்டான். ஆனால் இன்று தோற்றுப்போனவன் எல்லாம் தன்னைத்தானே விதி என்று தேற்றிக்கொள்கிறான். ஒருவனுடைய தோல்வி அவனுடைய முயற்சியின் தோல்வியே அன்றி விதியென்று எதுவுமேயில்லை.
'விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பா¤மாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்'
காதல் தோல்வியில் இருந்து பலபேர் வெளிவந்துவிடுகிறார்கள். சிலபேர் மட்டும் மாண்டுபோகிறார்கள். மாண்டுபோகிறவர்கள் காதல் மட்டுமே வாழ்க்கையென்று நினைத்துக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு மனிதன் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார் கவிஞர்.
நம்பிக்கையூட்டும் கவிதைகளைத் தந்த கவிஞர் கத்துக்குட்டி அவர்கள் மிகவும் தெளிவாகவும், வித்தியாசமாகவும் மனித உணர்வுகளை அணுகியிருக்கிறார். பிற கவிஞர்களில் இருந்து வேறுபட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள இந்த கவிஞர் முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் அவர் வெற்றியும் கண்டிருக்கிறார்.
- நிர்வாணி.
Thanks a lot...En Manakumargalai Vaarthaigalaga Sethikiyathuku... Best regardsrnrnJack Rajakumar.