என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள்
-துவாரகன்-
இந்தத் தலைகள்
எப்போதும்
என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன.
தனியே வெட்டி எடுக்கப்பட்ட தலைகளுக்கு
சீப்புக் கொண்டு
எந்த ஸ்ரைலிலும்
என் கனவுகளில்
நன்றாக வாரிவிட முடிகிறது.
தளர்ந்து… இறுகி…
தனியே வந்து விழும்,
உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
என் கைப்பைக்குள்
பத்திரமாக இருக்கின்றன.
தனியே வெட்டி எடுக்கப்பட்ட
ஒரு ஆட்டின் தலைபோலவே.
துணிக்கடைகளின் முன்னால்
மொடல் உருவங்கள்
எடுப்பான தோற்றம்தான்.
என்றாலும்
அந்தத் தலைகள் மட்டும்
தனியே தொங்கிக் கொண்டிருத்தல்
இறைச்சிக் கடையில்
இரத்தம் சொட்டச் சொட்ட
கொழுவி விட்ட இறைச்சித் துண்டங்களாக
எனக்குள் உருக்கொள்கின்றன.
மேக்கப்காரன் கூட
மேசையில் வைத்த
பிளாஸ்ரிக் மொட்டைத் தலைகளுக்கு
விதம்விதமாக முடி வைத்து
மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்க்கிறான்.
தலைக்கு மட்டும் சம்பூ வைத்து
குனிந்து நின்று
தலை கழுவுதல் தரித்திரமென்று
யாரோ சொன்னது ஞாபகம் வர
வீதிகளும், கடைகளும், மேக்கப்காரர்களும்
என்னை விரட்டுவதாக உணர்கிறேன்.
- துவாரகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31