நாய் குரைப்பு
-துவாரகன்-
இந்த நாய்கள்
எப்போதும் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன.
இரவு பகல் நடுச்சாமம்
எந்நேரமும் நாய் குரைப்பு.
எக்கணத்திலோ,
எப்பொழுதிலோ,
வரப்போகின்ற சாவுக்கே
கலங்காத நாங்கள்
இந்த நாய் குரைப்புக்களுக்கு மட்டும்
கலங்க வேண்டியிருக்கிறது.
மார்கழி மாதத்துக் கூதற் குளிர்கால நடுக்கம்போல்,
ஒரு முதியவரின் தளர்வைப்போல்,
எல்லாமே இந்த நாய்குரைப்புக் காலங்களில்
முளைத்து விடுகின்றன.
அந்தக் காலங்களில்…
இந்த நாய்கள்
சுடலையிலிருந்து
புளியமரங்களிலிருந்து
நடந்து சென்ற பேய்களைப் பார்த்தும்
வானத்தைப் பார்த்தும்
கூரையைப் பார்த்தும்
குரைத்த காலங்கள் போய்விட்டதாக
என் அம்மாச்சி சொன்னது ஞாபகம்.
இப்போ
எங்கள் காலங்களுடன்
குரைத்துக் கொண்டிருக்கின்றன.
மழைபெய்து ஓய்ந்த
மந்தார வேளைகளில்தான்
தடிகளுடனும் வேட்டைநாய்களுடனும்
எங்களுர் மனிதர்கள்
முயல் வேட்டைக்குப் புறப்படுவார்கள்
அந்தக் காலங்கள் கறங்குபோல் சுழன்று
இப்போதும் திரும்பிவிட்டனபோலும்.
இறந்த காலங்களும்
நிகழ்காலங்களும்
எதுவெனப் புரியாமல்
விறுவிறுவென வலிக்கும் தேள்கடிபோல்
என் மூளைக்குள் எல்லாமே குழம்பிப்போயுள்ளது.
இப்போ
இந்த நாய்கள்
குரைக்காது கடித்து விட்டால்கூடப்
போதுமாயிருக்கிறது.
அப்போதாவது
தொப்புளைச் சுற்றி
ஊசியைப் போட்டாவது தப்பிக்கொள்ளலாம்.
271020070815
- துவாரகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09