என் குழந்தைகளுக்குள் வக்கிரங்களை
விதைத்த போரே தொலைந்துபோ
மாமனிதர்களைக் காவுகொண்ட போரே
மறைந்துபோ
சோலைகளுக்குள் உல்லாசமாய்
பாடி மகிழ்வித்த குயிலையும் சோலையையும்
அழித்துவிட்ட போரே ஓடிப்போ
இன்பமாய் வாழ்ந்த என் மக்களின் முகங்களை
கண்ணீரால் கழுவிய போரே காணாமற்போ
வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வேண்டும்
எங்களின் ஒவ்வொரு வீட்டிலும்
சோகத்தைப் பொறித்துவிட்ட போரே
அழிந்துபோ
இன்று எங்களின் சுடுகாடுகளிலும்
புல் முளைத்திருக்கிறது
வீடுகளையே சுடுகாடாக்கிய போரே
மரணித்துவிடு

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others