உயிரின் தேடல்
=============
நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?
பூட்டியக் கதவுகள்
உடைந்த சன்னல் கண்ணாடிகள்
து£சி அடைந்த முற்றம்
எப்போதோ நான் வரைந்த
செம்மண் கோலம்
உடைந்த திண்ணை
உயரமாய் வளர்ந்த தென்னை
இன்னும் அறுந்து விழாமல்
காற்றில் ஆடும் ஊஞ்சல்..
தேடிப்பார்..
இதில் எங்காவது
ஒளிந்துகொண்டிருக்கும்
உனக்கான என் அடையாளம்.
*******
எப்போதாவது
எனக்குள் உன் நினைவுகள்
மனக்குகையின் இருட்டில்
எட்டிப்பார்க்கும் சூரியக்கதிர்களாய்.
இப்போது
நீ எப்படி இருப்பாய்?
தாடி மீசையுடன்
கதர்ச்சட்டையில்
தோள்களில் தொங்கும்
ஜோல்னாபையுடனா?
வெள்ளை உடையில்
பளீர் சிரிப்பில்
கையில் மின்னும்
கடிகாரச் செயினுடன்
அலைபேசியின்
ஆங்கில உச்சரிப்பிலா?
கரைவேட்டியும்
கசங்கிய துண்டும்
கற்களின் விரல்களில்
கரகர தொண்டை
மேடையில் முழங்கும்
தமிழனின் குரலாய்..
நீ இப்போது
எப்படி இருப்பாய்?
எப்படி இருந்தாலும்
உன்னை -
என்னில் இன்னும்
எரிந்து கொண்டிருக்கும்
உன்னை-
என்னால் காணமுடியுமா?
திருட்டு மாங்காயை
கடித்துக் கொடுத்தபோது
எச்சில்படாத
நம் இதயம்
மூளைவளர்ச்சியில்
முடமாகிப் போனது
எப்படி?
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01