இரத்த உறவுகள்
==============
அடிபட்டபோது
வலிக்கவில்லை
பொங்கிவந்த ரத்தம்
கட்டுகளை
உடைத்து
கசிந்து உடைந்ததில்
வலித்தது
கட்டுகளின் அடியில்
கீறிப்பிளக்கும் காயம்
மீண்டும் ஒருநாள்
காயம்படாமலேயே
சொட்டுச் சொட்டாக
ரத்தம்
தசைத் துணிப்பிழிந்து
சிந்தியது தரையில்
சோபாவில்
பள்ளிக்கூடத்து பெஞ்சில்
பார்க்கில்
தியேட்டரில்..
எங்கிருந்து
பொங்கித்துடித்து
சிதறி
வழிகின்றது ரத்தம்
என் சிறகுகள்
அறுத்து
என் கால்களின் ஓடையில்
என் கைகளுக்கு விலங்காய்
என் பிறப்பின் காயத்திலிருந்து
கசிகின்றதா..?
எங்கிருந்து...?
ரத்தம்..
ரத்தம் உறவாமே
உறவுகளின் கதவுகள்
திறவுகோலில்லாதக் கதவுகள்
வாசலில்லாதச் சிறைகள்
அப்போதும்...
சிவப்பு ரத்தம்
வெள்ளைரத்தமாகி
வீங்கிப் பருத்த
மார்பகத்திலிருந்து
எதைத் தேடி ஓடுகின்றது?
படைப்பின் சிருஷ்டி
தோல்வியில் அழுகின்றான்
வெள்ளை ரத்தம்
வெற்றி நடையுடன்...
- அன்புடன்,
புதியமாதவி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07