தவளை கத்தும் மழை..அலகு தீட்டி சுள்ளி முறித்து
01.
தவளை கத்தும் மழை
----------------------------
வெள்ளமாய் பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்
கோடையின்றிக் கொட்டும் மழை
மூழ்குவோர் மூழ்க
நீந்துவோர் நீந்த
கரைசேர்க்க யாருண்டு
முகில் குவிந்த பவ்வல்
வான்சிவந்து இடி
தவளை கத்தி மழைஓயா
நீரை ஏவி விட்ட பூமி
முகிலாய் குவித்தவானம்
யார் யார்
ஊன்றுகோலற்ற கிழவன் வானம்
தள்ளாடும் பூமிக்கிழவி தகராறா?
புரிந்துணர்வு எங்குண்டு
சீலைப்பேன் புளுத்து
உடலெல்லாம் ஊரும் அவஸ்;தை
சிந்தனைனயில் சீழ் கட்டி
தெறிக்கும் வலி
பழம்புண் ஆறா
அனைத்துக்கும் வெயில் வேண்டும்.
02.
அலகு தீட்டி சுள்ளி முறித்து
---------------------------------
காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கையென்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்தவனா?
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன் நான்
புயல்காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக்குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப்பழ வாய்விரித்து
உம்மா என்னும் என்குஞ்சு பொன்குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைப்படையா இறக்கையாலே
சுழன்றாடிக் காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதையில்லை
வாழ்வோரை வாழவிட
ஈனஇரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒருபோதும் துப்பாக்கி துணையாகா.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02