நம் கவிதைகள்.
______________
எப்போதும் கவிதை
உன் வசம்
எப்போதாவது
கவிதை
என் கண்வசம்
தீயைத் தொட்டவுடன்
துடிப்பது மட்டுமே
என் கவிதை
தென்றலின்
தீண்டலில்கூட
உன் கவிதை
எல்லாமே
கவிதையாகிப்போனது
உனக்கு
எதுவுமே
கவிதையாகாமல்
நழுவுகின்றது
எனக்கு
கவிதை
உனக்கு
விருந்து
கவிதை
எனக்குப்
பசி
கவிதை
உனக்கு
காதல்
கவிதை
எனக்கு
போர்க்களம்
நீ
உன்
கவிதைகளில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்
நான்
என்
கவிதைகளுக்காகப்
போராடிக்கொண்டிருக்கின்றேன்.
எல்லாமே
கவிதையாகிப்போனது
உனக்கு
எதுவுமே
கவிதையாகாமல்
......
எனக்கு..
***
உன்
கவிதைமகளுக்கு
தாய்ப்பாலின்
தாலாட்டு
என்
கவிதைமகளுக்கு
கள்ளிப்பாலின்
தொட்டில்
உன்
கவிதைவானில்
கோடானக்கோடி
நட்சத்திரக் காதலிகள்
என்
கவிதைமண்ணில்
ஒரேஒரு
சூரியன்
உன்
காதல் கவிதைகள்
உன்
ஆண்மைக்கு
அங்கீகாரம்
என்
காதல்கவிதைகள்
என்
பெண்மைக்கு
கேள்விக்குறி
நீ
எழுதினால்தான்
கவிதை
நான்
எழுதாமல்
இருப்பது
எல்லாமே
கவிதை.
*****
உன் கவிதை
காதலின்
அணைப்பு
என் கவிதை
தாய்மையின்
பிரசவம்
நினைக்கும்
போதெல்லாம்
காதலிக்க
உன்னால் முடியும்
நினைத்தவுடன்
பிரசவிக்க
என்னால் முடியுமா?
*******
நீ
பனித்துளியை
சேறாக்கி
விளையாடுகின்றாய்
நான்
பசிச்சேற்றில்
சோறாக்கி
விளையாடுகின்றேன்
*****
கண்ணன்
உன்
காதலின் சின்னம்
கண்ணன்
என்
காதலின் அவமானம்
*********
நீ
கண்ணகிக்கு
கோவில் கட்டுகின்றாய்
நான்
கண்ணகிக்கு
வீடு கட்டுகின்றேன்
*****
தீயில்
நீ
குளிர்காய்கின்றாய்
தீயில்
நான்
அடுப்பெரிக்கின்றேன்
தண்ணீரில்
நீ
நீந்துகின்றாய்
தாகத்தில்
நான்
வாடுகின்றேன்
ஆகாயம்
உன்
கோட்டை
ஆகாயம்
என்
கூரை
மண்
உன்
சொத்து
மண்
என்
வயல்
காற்று
உன் தோட்டத்தின்
தென்றல்
காற்று
என் குடிசையில்
புயல்
நீ
கவிதைகளைப்
படைக்கும்
பிரம்மா
நான்
கவிதைகளைத்
தேடும்
மனிதன்.
நீ
படைத்துக்கொண்டே
இருக்கின்றாய்..
படைப்பின்
பிரம்மத்தைப்
படைக்கும்வரை
உன்
கைகள்
ஓயப்போவதில்லை
பிரம்மனின்
படைப்புகளை
வாழவைக்கும்வரை
என் போராட்டம்
ஓயப்போவதில்லை.
*******
உன்
கவிதைப்புறா
சிறகடிக்கின்றது.
என்
கவிதைக்குயில்
காக்கையின்
கூட்டிலிருந்து
கண்விழிக்கப்போகும்
தன் குஞ்சுகளுக்காக
காத்திருக்கின்றது.
நாளை...
புதுக்கவிதையின்
விடியலில்
என்
குஞ்சுகளின்
குயில்தோப்பு...
- அன்புடன்,
புதியமாதவி,
மும்பை 400 042
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01