தவிப்பின் தீராத கணங்கள்
----------------------------------------
கடவுளிடமுமல்லாத சைத்தானிடமுமல்லாத
முடிவிலியின் கணங்கள்
தவிப்பின் பிசுபிசுக்கும் பிடியினில்
சிக்கிக்கொண்டே நீள்கின்றன.
இரவினை ருசிக்கமுடியாதபடி
ஒரு பெரும் பசியினடியில்
புதைந்து கிடக்கின்றேன்
தவிப்பின் தீராக்கணங்களினால்
நெய்யப்பட்ட இரவுகள்
நாட்களின் சுவாதீனத்தை
அமுக்கிக்கொண்டிருக்கின்றன
வெறுமை கொட்டிக்கிடக்கும் படுக்கைமீது
போர்வைக்குள் சிறைப்பட்டு
நொடிகளெல்லாம் சிதையுண்டு போகின்றேன்.
கடிகாரத்தின் எண்ணிக்கை
மண்டையில் சமட்டியடித்துக்கொண்டிருக்கிறது…
அணலில் வெந்து வடியும் தேகத்திலெங்கும்
தவிப்பின் வலிகள்
தெரித்து வெடிக்கின்றன…
நிரப்ப முடியாக் கோப்பையொன்றில்
என்னை உருக்கியுருக்கி
ஊற்றிக்கொண்டேயிருக்கிறேன் நானும்…
20090527
- ஜதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-11