தொலைந்துவிட்ட சொந்தங்கள்.
பொட்டிழந்து பூவிழந்து
புதுப் பட்டிழந்து
கட்டுப் பெட்டியுடன்
கடல்கடந்து சென்றீர்.
அமுதம் பொழியும் வானம்
அன்று பொழிந்ததெல்லாம் - உங்கள்
அன்புச் செல்வங்களின் உயிரை
அள்ளிச் செல்லும் குண்டுகள்தான்.
மழலைச் செல்வங்கள்
மறுசொல் உதிர்ப்பதற்குள்
மரணமெனும் தூரிகை
மாற்றியது வரலாறைத்தான்.
பரிதவித்து கண்முன்னே மாண்ட
பச்சிளம் பாலகர்தான் எத்தனையோ!
பாடையிலே கொண்டு சென்ற
பசும் பாவைகள்தான் எத்தனையோ!!
விதைத்தனர் விசமிகள்
விந்தைமிகு பயிர்களை - அவை
விடிவதற்குள் முளைத்தனவே
விதவைகளாய் இத்தரையினிலே.
கண்டதுயர் கணக்கில்லை
கண்ணிற்கூட நீரில்லை
கண்ணாளன் மரித்தால்கூட
கலங்குதற்கு உங்களிடம்.
இத்தனையும் இழந்து
இத்தரை மறந்து
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து
புதுயுகம் படைத்திடவே.
தேன்மதுரத் தமிழோசை போதும்
தமிழரெனத் தலை நிமிர
இயல் இசை நாடகம் - புலம்பெயர்
இலக்கியங்கள் படைத்திடவே.
இத்தரையில் விட்டபிழை வேண்டாம்
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு
உயரட்டும் இமயம் வரை.
தொலைத்துவிட்ட சொந்தங்களை - உயர்
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை
தொலைவில் இருந்து கொண்டே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-09-16