Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஏனிந்தப் பிரிவினை?

- பவித்திரா

ஏனிந்தப் பிரிவினை?
கனடாவிலிருந்து பவித்திரா

அன்புசால் தமிழினமே! அமைதிசற் றடைந்திடுக!
ஆறறிவை எமக்கிங்கு ஆண்டவன் அளித்தமை
இன்புற வாழ்வுதனை இனிது களித்தற்கே!
இடருடன் துயரும் இடையிடையே வருதல்தான்
மன்னுமிவ் வையகத்தே மாண்புறு உயிர்கட்கு
மீட்சியிலா நிகழ்வன்றோ? மேதினியில் இயல்பன்றோ?
என்புருக உளம்நோக எதிர்கொண்ட செய்திகள்தாம்
ஏக்கம்தனை யளித்து எமைவாட்டி நிற்பனவே!

கண்ணெனப் போற்றிடும் மாவீரர் கனவுகளும்,
கதிரோனாம் தம்பியவன் கனிவான நினைவுகளும்,
நுண்ணிய ஆற்றலுடை மறவர்தம் கொடைகளும்,
நோன்பிரு தமிழன்னை மாதவப் பேறதுவும்,
மண்ணிழந்து மரபிழந்து மானம்தனைத் தொலைத்து,
மகிழ்வின்றி வாழ்ந்திடும் மாந்தர்தாம் சொரிந்திட்ட,
கண்ணீரும் செந்நீரும் களங்கமிலா வாழ்வுமங்கே
காத்திடுமெம் நாடுதனை! கலங்காதீர் தெளிவடைவீர்!

களத்தினிலே இடமளித் தணைத்த எம்தலைவன்
கருணா என்கின்ற கனிவான பெயர்கொடுத்துத்
தளத்தினிலே பெருந்தலையாய்த் திகழ்ந் திட வேயங்கு
தக்கநல் பதவியும் தருணத்தில் வழங்கினான்!
வளமிகு நாடுகட்கு வாழ்த்தியே அனுப்பிநின்றான்:
வாஞ்சையுடன் சந்தித்து வருடிக் கொடுத்திருந்தான்!
அளவிலா வாய்ப்புக்கள் அத்தனையும் பெற்றிருந்தும்,
அறிவிலியாய்ப் போனதன் ம+மம்தான் பு£¤யவில்லை!

போரியல் வரலாற்றில் புதிதல்ல இவையொன்றும்,
புல்பூண்டு நெல்வயலிற் களைதலென அவைகளையும்
நேரகாலம் பார்த்திருந்து நீக்கிடுவார், பொறுத்திடுக!
நீசர்கள் வாழ்வங்கு நிர்மூல மாகுமன்றோ?
பாரதிர வந்ததுயர் பனியென விலகிவிடும்!
பகலவனாம் தலைவனவன் ஒளிபட் டுருகிவிடும்!
தூரமில்லை! தாயகத்தின் விடிவங்கு தெரிகிறது!
துணையான மறவர்கள் தோள்களும் துடிக்கின்றன!


வதந்திகளை நம்பாதீர்! வார்த்தைகளை அளவிடுவீர்!
வடக்கெனவும் கிழக்கெனவும் பிரிவினைகள் பேசாதீர்!
சுதந்திரமாய் நாமங்கு சுற்றிவந்த காலங்கள்,
சொந்தமெனப் பந்தமெனத் துணைநின்ற கோலங்கள்!
இதந்தரு வாழ்வுதனை இன்றுநாம் மறக்கலாமா?
ஏனிந்த வேறுபாடு? எவரிதன் மூலகர்த்தா?
பதந்தரு வேளைதனில் பறித்திட வந்தவரைப்
பகுத்தறிந்து புறம்தள்ளப் பக்குவமாய்ச் செயற்படுவீர்!

திருமணங்கள் புரிந்ததும் சீர்வரிசை பேணியதும்
சிறப்புற வாழ்வுதனைச் செம்மைப்ப டுத்தியதும்
திருவிழா நாட்களிலே திசையெதிராய்ப் பயணித்து
தித்திக்கும் விருந்துண்டு திரைகடல் எழில்கண்டு
பருவமழை காத்திருந்து பயிர்செய்ய உதவிநின்று
பயனுடனே விடுமுறையை நட்பிற்காய்ப் பேணிநின்று
பெருமனதாய் நாமன்று பிணைந்துவாழ்ந் திருந்தோமே!
பிரிவினைகள் பேசுகின்ற பாதகரை விலக்கிடுவீர்!

ஆனையுடன் மோதவரும் ஓநாய்கள் அவரன்றோ?
அழகியவெள் ளாடொன்று செம்மறியாய் மாறியதோ?
மானமிகு சூரியனின் மஞ்சட்கதிர் தெறித்து
மாய்ந்திடும் விட்டில் களாவாரி வரன்றோ?
கானகத்து வேங்கையுடன் குள்ளநரிக் கூட்டமொன்று
காலநேரம் பார்த்திருந்து கபடம் புரிகிறதோ?
சேனைபல புடைசூழச் செந்தமிழர் திசைவந்த
சிங்களமும் ஆரியமும் அடைந்தகதி மறந்தனரோ?

ஒற்றுமையே பலமெனும் உயர்வாய்க் கியம்தனை
ஒவ்வொரு தமிழ்மகனும் உணர்ந்து வாழ்ந்திருப்பின்
இற்றைவரை வாட்டிடும் இனவேறென் றசொல்லும்
என்றோ தொலைந்திருக்கும்! எம்தேசமும் விடிந்திருக்கும்!
நற்றரையில் ஊர்ந்திருக்கும் சிற்றெறும்புக் குழுகாணீர்!
நறைசேர் குளவிக் கூட்டம்தனை நோக்கிடுவீர்!
மற்றையதம் மினத்தோடு மகிழ்ந்திருந் துறவாடி
மனமுவந்து பகிர்ந்துண்ணும் காக்கைதனைக் கண்டிடுவீர்!

பொறுமையுடன் எம்புலிகள் புரிகின்றார் சாதனைகள்!
புவிதனிலே சந்தித்தார் பொல்லாத சோதனைகள்!
நிறுவிடுவார் விரைவினிலே தாயகக் கோட்பாடு!
நீதியுடன் நாம்வாழ நற்பணிக ளாற்றிடுவார்!
மறம்காத்த தமிழினத்தின் சரித்திரத்தை முன்நோக்கி,
மாறுபட்ட வேற்றுமையால் விளைந்த துயரறிந்து,
உறவினருக்கும் நண்பருக்கும் ஊரிலுள்ள அனைவருக்கும்
ஒற்றுமையின் மகத்துவத்தை ஒன்றிணைந் தெடுத்துரைப்பீர்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30


விஜயகுமார்

16 years ago

தமிழினம் சுவைக்கும் அற்புத கவிதை வாழ்த்துக்கள் ........

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அன்னை பூபதிக்காக...
  • ஒற்றைக்கை தட்டுதலால்
  • விண்ணிலிருந்து கோமகன
  • நன்றி தமிழகமே!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube