தொலைவு... அடுத்தொரு நாளில்
01.
தொலைவு
--------------
பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!
மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !
தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!
இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..
நடுவானத்தில் ,
பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள் ,
முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்!
02.
அடுத்தொரு நாளில்....
-----------------------
சொல்ல வந்ததை
முதலில் சொல்லிவிடுவதாக கூறி
மௌனம் பேச தொடங்குகிறாள்!
முன் பொழுதும்
முன்பெப்பொழுதும்
ஆரம்ப நிலை இதுவாய்தானிருந்தது!
இன்றேனும் சொல்லிவிடுவதை போல
உடல் மொழிகள்
அறிவித்தவண்ணம் இருந்தன!!!
பொறுமையிழந்த நேரம்
பின் சந்திப்போம் என்றவாறு கடக்க
இவளும்
அடுத்தொரு நாள்
நமக்கானதாய் இருக்கிறதென்பதை
சொல்லாமல் சொல்லியவாறு
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26