விடையற்ற வியப்புக் குறிகள்!!!
--------------------------------------
'உன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா!'
**
மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு;
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!
**
நெஞ்செல்லாம்
இலட்சியக் கனவோடு-
அஞ்சாது செய்திட்ட
சத்தியத்தின் நினைவோடு-
சென்றவனின்
கண்ணிலே பட்டவன்தான்-
பிக்பாக்கெட் தொழிலினிலே
பிரபலக்கேடி!
**
விழிமுன்னே மற்றவரின்
பர்சு ஒன்று-
பரிதாபமாய்
பறி போவதைப்
பார்த்திட்ட அவனுமே;
'எவன் சொத்தோ போகுதடா
எனக்கென்ன கவலையடா?'
என்று-
இன்று இப்
புனிதப்
பூமியிலே-
போற்றிக் காக்கப்படும்
பொன்னான கொள்கை-
புரியாதவனாய்-
பாய்ந்தோடிக்
கேடியினைப் பிடித்தானே!
**
கேடியெனும்
பட்டமெல்லாம் சும்மாவா ?
கில்லாடியான அவன்-
கிட்டத்தில் ஓடிவந்த
காவலரின்
கரத்தினையே-
தேடிப் பற்றி
சம்திங் தந்தானே!
**
நீதி
காக்க வேண்டிய
காவலரோ-
கரன்சி செய்த வேலையினால்-
கமுக்கமாகச் சிரித்தபடி-
கயவனவன் முதுகினிலே-
'செல் 'லுமாறு
செல்லமாகத்
தட்டி விட்டு;
அப்பாவியான இவன்
கழுத்தினிலே கை போட்டு-
'அட
நடடா, இது புது கேசு '
என்றாரே!
****
மலர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும்
மொட்டுக்கள்!!!
**
கலர் கலராய்
கண்ட கனவுகள்
கருகிப் போகும்
சோகங்கள்!!!
**
பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட
யாருமின்றி
பரிதவிக்கும்
பலியாடுகள்!!!
**
'அவரவர் விதி'யென்றும்
'அவன் தலைச் சுழி'யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!!
**
ஆங்கோர் பக்கம்-
சி.பி.ஐ
ஆதாரங்களுடன்
கைதாகும்
கனவான்கள்-
சில மணியில்-
சிரித்தபடி
சிறை விட்டு
விடுதலையாகி
வெளியேறும்
விநோதங்கள்!!!
**
அவருக்காக
குரல் கொடுத்துக்
கவலைப் படக்
கணக்கற்றக்
கூட்டங்கள்!!!
**
இப்படி
ஏராளமாய்
இருக்கின்றன-
விடையற்ற
வியப்புக் குறிகள்!!!
-ராமலக்ஷ்மி, பெங்களூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-04
-----------------------------
இந்த தலைப்பே என்னை பெரியதொரு ஆர்வத்தை மனதில் பதித்தது!
//'உன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா!' //
எல்லோரும் சொல்லும்/சொன்ன வாசகங்கள்.இது
எல்லோருடைய ஞாபகங்களையும் கொஞ்சம் கடந்த காலத்திற்கு கொண்டு போகும்.
**
//மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு;
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!//
இந்த பத்தியை வாசித்ததும் என் பாதங்களை அனுதாபத்தோடு பார்க்கிறேன்.
**
**
//மலர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும் மொட்டுக்கள்!!!
கலர் கலராய் கண்ட கனவுகள்
கருகிப் போகும் சோகங்கள்!!!//
அருமையான வரிகள். இந்த கவிஞர் தனது வார்த்தைகளால் அந்த கதாபாத்திரத்தையே சித்தரித்து சமூக அவலங்கள் சொல்லி, அந்த கதாபத்திரத்தின் மீது அனுதாபமும் அதீத கவனமும் நம்மில் உருவாக்குகிறார். யாரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று சொல்கிறார்.
//பழி ஓரிடம் பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட யாருமின்றி
பரிதவிக்கும் பலியாடுகள்!!! //
இந்த சமுதாயத்தில் இப்படி எத்தனை பலியாடுகள்??? வெவ்வேறு காரணங்களால்???!!!
//'அவரவர் விதி'யென்றும்
'அவன் தலைச் சுழி'யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!! //
வாசகனின் அனுதாபத்தை முன்னதாகவே அறிந்து அதையும் விமர்சித்துள்ளது அதிசயமாக இருக்கிறது.
**
//ஆங்கோர் பக்கம்- சி.பி.ஐ ஆதாரங்களுடன்
கைதாகும் கனவான்கள்- சில மணியில்-
சிரித்தபடி சிறை விட்டு விடுதலையாகி
வெளியேறும் விநோதங்கள்!!! //
நீதி தேவதை இந்த கவிதை வாசிக்க வழியுண்டா?? என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை!!!
**
//இப்படி ஏராளமாய்
இருக்கின்றன- விடையற்ற
வியப்புக் குறிகள்!!! //
இதை வாசித்த பின்னர் நானும் ஒரு வியப்புக்குறியாக உணர்கிறேன். இதுவே இந்த படைப்பின் மாபெரும் வெற்றி. எனது வியப்பு நல்ல கவிதை கண்டு, சமூக அவலங்களை மென்மையாக சொன்ன விதம் கண்டு. வறுமைப் புரட்சியில் வெற்றி பெற்று வளரும் செடி எனக்கு இந்த சமூகத்தின் முன்னர் பாராட்டும் படியான ஒரு வியப்பாக மாற இந்த கவிதை ஊக்கம் தருகிறது.
இதை எழுதிய கவிஞருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
மரியாதைகளுடன்
என் சுரெஷ்
-ராமலக்ஷ்மி, பெங்களூர்
நல்லவனா இருப்பவனையும், நயவஞ்சகமா மாற்றும் ஒரு காலகட்டத்தில் தான் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது, கூடவே வருத்தமும் தொற்றி கொள்கிறது.
நாமே கண்கூடா பார்க்கிறோமே இது போல நடப்புக்களை. போதாதற்கு அஞ்சும், பத்தும் திருடினவன், அஞ்சா பத்தா என்று கம்பி எண்ண, கோடிகளில் திருடுவோர், கோமான்களாக வலம் வரும் அவலத்தையும்.
எல்லோர் மன ஓட்டங்களையும் பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை. அற்புதம். வாழ்த்துக்கள்.