சிந்தனை செய்...
-------------------
வானத்தை முட்டிடும் கூரையிலே
வந்துமே குந்திய குருவிகளும்
கானத்தை இசைத்துமே நாற்புறமும்
காட்சிகள் கண்டு களித்ததனால்
பானத்தை அருந்திய போதையைப்போல்
பார்த்தவை மயங்கிய காட்சியினை
ஊனத்தைத் தாங்கிய மானுடமும்
உள்ளுர ஏக்கமாய் பார்த்தனனே.
ஐந்தறிவுள்ளவை என்றுரைக்கும்
அவைகளோ இயற்கையை ரசித்திடவே
சொந்தறிவு ஒன்றது கூடியதாம்
சொப்பன வாழ்வது மானுடனும்
நொந்தவன் மனத்தனாய் ஏக்கமுடன்
நோக்கிய கண்களும் ஓய்ந்தனவாய்
சொந்தமே வாங்கவோர் கட்டிடத்தை
சோகமாய் நாடியே காத்திருக்கான்.
வாழ்வினில் சுகமெது ஏதறியா
வளமென எதனையோ தேடுமவன்
தாழ்வது தன் நிலை கண்டிருந்தும்
நாள்தினம் ஏங்கியே வாழுகிறான்
நீழ்வது சோகமே தெரிந்திருந்தும்
நித்தமும் போரிடும் கற்பனையின்
வீழ்வது கண்டுமே குருவிகளும்
வாய்விட்டுச் சிரித்தன உச்சியிலே.
எத்தனை கட்டிடம் குந்தியவை
ஏற்றமாய் நாளுமே வாழ்ந்திடவே
புத்தனைப் போலவே போதியின்கீழ்
குந்தி இருந்தொரு புது மனைக்காய்
சொத்தினைத் தேடிட நாள் அலைந்தே
நித்தமும் நிம்மதி துறந்தபடி
இத்தனை ஏக்கமாய் வாழ்வதற்கா
இறைவனும் கொடுத்தனன் ஆறறிவை.
நிம்மதி வேண்டிடின் வாழ்வினிலே
நீக்கிடு மனத்தினின் ஆசைகளை
உன்மதி சஞ்சலம் கண்டுவிடா
உள்ளதில் திருப்தியைக் கண்டுவிடின்
சத்தியம் பிறப்பதன் நற்பலனை
சாவரை கண்டுமே சிறப்புறுவாய்
பத்தியம் தேடிடும் வாழ்வினுக்கு
பக்குவம் ஒன்றுதான் சொத்துரிமை.
-த.சு.மணியம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-12