தமிழ்.. புத்தனின் புதுமொழி
01.
தமிழ்
---------
எங்கே என் உறவு
தேடினேன் தமிழை
மொழி தேடி எழுகிறது
என் விழிகள்
அவளை ஆவலோடு
அணைக்க அவாவுற்றேன்
அணைக்குமுன் அணைந்து விடுவாளா?
அச்சப்பட்டேன்
காணொளியும் கைத்தொலைபேசியும்
கன்னித்தமிழை கசக்கிப்பிழிந்தன
தொல்தமிழ் தொலைந்து
தொலைபேசிக்குள் நுழைந்தாள்
என் உதடுகளில்
தமிழ் தழுவுகிறதா
இல்லை நழுவுகிறதா?
தயங்கினேன் பின்னர்
இயங்கினேன்
தொலைபேசி இல்லையேல்
தொடர்பே இல்லை
தொலைபேசியே
தொடர்பின் தொப்பிள்க்கொடியானது
இணையம்தான் இவளோடு
இணையும் இடமானது
இவையெல்லாம் இயந்திரவாழ்வின்
இணைபிரியா இருப்புக்களாயின
இதனால் இவளுமிருப்பாள்
இன்னுமொரு நூற்றாண்டு
இதுபோதும் எனக்கு இப்போது
தனிமையில் தழுவினேன்
தமிழை தயங்காமல்.
இணைய வலையில் விழுந்து
இனியும் வாழ்வேன் இவளோடு
சதுரக்கணணியில் மிதக்கும்
விம்பங்களைச் சுவைக்கும்
சாதாரண மனிதனாயல்ல
சங்கத்தழிழைச் சுவைத்து
கன்னித்தழிழை காதலித்து
முத்தழிழை முத்தமிட்டு வாழ்வேன்
மூச்சுள்ளவரை!
02.
புத்தனின் புதுமொழி
-----------------------
நேற்று
சாந்தன் பிறந்து
சாத்வீகம் பகின்றான்-அவன்
போதனை வழியால்
பௌத்தம் பிறந்தது
இன்று
பௌத்தத்தின்
பாதுகாவலர் தாமெனச்
சொல்லிய சிங்களம்
கௌதமன்
கண்ட கனவை
கடந்து போகும்
ஒவ்வொரு கணங்களிலும்
கங்கணம் கட்டியே
கலைத்த சிங்களம்
குருதியும் அகந்தையும்
கொடூரமும் கொலைவெறியும்
கொண்டு நின்ற சிங்களம்
சித்தார்த்தனின்
சிந்தனைச் சிறகுகள்
தாமெனச்சொன்னது
சிரிக்க முடியவில்லை!
சிங்களத்திற்கு
புத்தனும் போதிமரமும்
புத்தகமாயின
புரிந்துகொள்ளமுடியவில்லை!
நாளை
மீண்டும்
புத்தன் பிறந்தால்
புழுவாய் துடித்து
புழுதியில் புரண்டு
புதைகுழி புகுவான்
ஒருக்கால்
புதைகுழி விட்டுப்
புத்தன் எழுந்தால்
போதனை செய்யான்
புதுமொழி பகர்வான்
புறப்படு போருக்கென்று!
-கலாநிதி தனபாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-04
என் கவிக்கு கருத்துரைத்த
சிதம்பரனின் கவிதன்னில்
சிறு பிழையும் காண்பேனோ?
சிவன் கவியில்
பிழை கண்ட கீரனைப்போல்
பெரிதாகச் சொல்லுதற்கு ஒன்றுமில்லை
இருந்தாலும் இதழின் இடைகளிலே
தழை தட்டுகிறது தவறில்லை
இன்னும் எழுதுங்கள்
இமையம் தொடுவீர்கள்
என்றும் அன்புடன்
கலாநிதி தனபாலன்