கல்வி.. தாமரை.. சாமந்தி
----------------------------
01. கல்வி!
முனைந்திடின் பெயரோ டேவல்
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;
கனிவுடன் ஒற்றை நீக்கின்
கவிஞனும் குரங்கும் உண்டாம்;
மனைதனைக் கூடும் சொல்லே
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;
உனையெனை சான்றோ னாக
உயர்த்திடும் கல்வி தாமே!
02. தாமரை!
ஏவலே முதலெ ழுத்தாம்;
எழுத்திதில் கடைத ளைகின்
காவிய வாலி இல்லாள்;
கடையிரண் டெழுத்து மானாம்;
மேவிய இடையை நீக்கி
விரைந்து ‘கால்’ தனைஒ றுத்தால்
தாவிலை நிலமாம்; அச்சொல்
தாமரை என்பேன் கண்டீர்!
03. சாமந்தி!
முதலெழுத் திறத்த லாகும்;
முதல்,கடை இனமே யாகும்;
முதல்,கடை யிரண்டெ ழுத்தை
முடிச்சிடின் அமைதி யாகும்;
முதலற குரங்கே யாகு(ம்;)
உயர்இரண்டா மெழுத்தி னோடே
இதன்கடை தளைகின் திங்கள்;
இச்சொல்சா மந்தி யாமே!
- அகரம்.அமுதா!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-07