சமாதானம்
நாளை நிச்சயமாய்
மலர்ந்துவிடும் ஓர் விடியல்
குவிந்துகிடக்கும் பிணங்களின்
வாடைக்கு மத்தியில்
சமாதானத்தின் யாசிப்பிற்கோ
யாரும் இருக்கமாட்டார்கள்
பிணந்தின்னி கழுகுகளும்
காகங்களும் தான்
மிஞசிப்போயிருக்கும்
கொன்றவர்கள் வென்றவர்கள்
தெருவில் கூவி ஆர்ப்பரிக்கமாட்டார்கள்
மரணங்கள் மனங்களை
சலிப்புறச் செய்திருக்கும் - அதனால்
அவர்கள் புனிதப்படுத்தப்படக்கூடும்
துப்பாக்கிகளோ துருப்பிடித்துப்போகும்
பீரங்கி குழாய்களுக்குள்
குருவிகள் குதூகலிக்கும்
சமாதானத்தின் தேடலில்
புதுயுகம் மலர்ந்ததாய்
எங்கும் அமைதி புரழும்
அவர்கள் ஆழ்வதற்கு
ஆழப்படுபவராய் எவரும்
இருக்கப்போவதில்லை
நாளை மலரும்
ஓர் விடியல் எமக்காய்
பிணங்களின் வாடைக்கு நடுவே
-கலியுகன்
- கலியுகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18