நிரஞ்சனி-தீபச்செல்வன் :சந்திப்பு அஞ்சலூடாக

Niranjiniஈழத்தின் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளைய எழுத்தாளர் நிரஞ்சனி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாறு சிறப்புப்பட்டம் படிக்கிறார். ஈழத்தில் புதிய பெண் எழுத்தாளர்கள் தோன்றுகிற தன்மை மிக குறைந்துவிட இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத்தொடங்கியவராக நிரஞ்சனி காணப்படுகிறார். 2002இல் 'நிழலாய்ப்போன நினைவுகள்' என்ற சங்குநாதம் பத்திரிகையில் வெளிவந்த கதையோடு எழுதத்தொடங்கினார். ஞானம், ஜீவநதி முதலிய இதழ்களிலும் உதயன், வலம்புரி முதலிய பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

எழுதி குவித்தவர்கள் எழுத்தில் சாதனை செய்தவர்கள் அவர்களின் அனுபவங்கள் என்று மூத்த தலைமுறையினரோடு உரையாடுகிற நமது சந்திப்பச்சூழலில் இளைய தலைமுறையினரின் தொடக்கங்கள் அதனூடான ஊக்குவிப்பக்கள் என்பன இடம்பெறாத நமது எழுத்துச் சூழலில் முதன்முதலில் இளைய எழுத்தாளர் நிரஞ்சனியுடன் பேசலாம் என்று அவரை அஞ்சலூடாக சந்தித்தேன்.

வணக்கம் நிரஞ்சினி. முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்லுங்கள்.

எனது அப்பா ஓய்வுபெற்ற பிரதி அதிபர். அம்மா இல்லத்தரசி எனக்கு சகோதரிகள் மட்டுமே உள்ளனர்.

எழுதத்தொடங்கிய சூழல் பற்றியும் எழுதி வருகிற சூழல் பற்றியும் சொல்லுங்கள்.

எனக்கு சிறுகதைகள் கவிதைகள் எழுதுவதற்கான சூழல் இருந்தது. அதாவது இவற்றை எழுத எனக்கு அமைதியான ஒரு சூழல் தோவைப்படும். நான் எழுத ஆரம்பிக்கும்பொழுது அச்சூழல் இருந்தது. அத்தோடு பெற்றோரின் சகோதரிகளின் ஆதரவும் இருந்தது.

உங்களை ஒரு பெண் எழுத்தாளராகவே நீங்கள் அடையாளம் காட்டி வருகிறீர்கள். அல்லது அத்தன்மை வாய்ந்த எழுத்துக்களைத்தான் கூடுதலாக எழுதி வருகிறீர்கள் உங்கள் பெண்ணியம் பற்றிய போக்கு எப்படியானது.

அப்படிப்பட்ட எழுத்துக்களைத்தான் நான் கூடுதலாக விரும்புகிறேன். எனக்கு சகோதரிகள் மட்டுமே இருப்பதுவும் இதற்குக்காரணமாக இருக்கலாம். எனது பெண்ணியம்பற்றிய போக்கு வித்தியாசமானது. நான் பெண்களை ஆண்களுக்க சமமாக நிற்க வேண்டுமென்றோ அல்லது அவர்களை அடக்கி ஆளவேண்டுமென்றோ கருதவில்லை. பெண்ணிற்கும் வாழ்க்கையில் ஒரு மதிப்புக்கிடைக்கவேண்டும். பெண்தானே என்ற நோக்கில் கீழ்த்தரமாக எண்ணப்படும் மனோபாவம் மாறி அவளையும் அன உணர்வுள்ளவள ஒருத்தியாக கருத வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பெண்களது உரிமைகள் நடைமுறை வாழ்வுகள் எப்படியிருக்கிறது.

உரிமைகள் ஓரளவு பேணப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்வு என்று வரும்பொழுது அவள் பல்வேறு விதமான சிக்கல்களுக்கு முகம் பொடுப்பவளாகத்தான் இன்றுவரை உள்ளாள்.

நடைமுறைகளாலும் சொற்களாலும் வதைபடுகிற ஒரு பெண் எழுத்தாய்த்தான் உங்கள் எழுத்துக்கள் காணப்படுகின்றன என்று நினைக்கிறேன். அதற்கு அப்பாலும் குழந்தைகள் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதை கூர்மையாக அவதானித்து எழுதுகிற பாங்கு உங்களிடம் இருக்கிறதா?

இதுவரை அப்படி எழுதவில்லை.

இன்றும் எழுதிவருகிற மூத்த தலைமுறை பெண்எழுத்தாளர்களது எழுத்துப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களது துணிச்சல் மிகு எழுத்துக்கள் பாராட்டிற்குரியவை. பெண் எழுத்துக்களுககு அடிதத்தளமிட்டது அவர்கள் தானே.

அவர்களிடமிருந்து விலகிய எழுத்தை எழுத முற்படுகிறீர்களா? அல்லது அதே தன்னiயுடைய எழுத்தை எழுத முற்படுகிறீர்காளா?

அவர்களிடமிருந்து விலகிய பெண் எழுத்தைத்தான் எழுத முயல்கிறேன்.

இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

அநேகமாக எல்லாப் பெண் எழுத்தாளர்களது ஆக்கங்களும் எனக்கு பிடிக்கும். அவை ஒவ்வொன்றும் ஏதோவொன்றை சமூகத்துக்கு வெளிக்கொணர முற்படுகின்றன.

இன்றைய யாழ்ப்பாண சூழல் அத்தோடு ஈழ அரசியல் என்பன உங்களிடம் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

யாழ்ப்பாண சூழல் என்னை எழுதத்தூண்டியது. குறிப்பாக யாழ்மண்ணின் பண்பாடு அருகிபபோவதாய் கவிதை எழுதினேன். வித்தியாசமாய் எழுதவில்லை.

அரசியல் எழுத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களிடம் அரசியல் எழுத்து பெரியளவில் இல்லை என்று கருதலாமா?

பெரியளவில் அரசியல் எழுத்துக்களை எழுதவில்லைத்தான்.

'நிழலாய்ப்போன நினைவுகள்' என்ற கதை எப்படி வந்தது? முதல் கதை என்ற வகையில் அந்த எழுத்து சிறப்பாயிருந்ததா? சராசரியானதா?

இக்கதை நான் பாடசாலையில் படிக்கும்போது எழுதினேன். அது சாதாரண இரு சகோதரிகள் தாய் இல்லாத நிலையில் அவர்களது நினைவுகளைப் புலப்படுத்தி சகோதரபாசத்தையும் வெளிக்காட்டகிறது. அது சராசரியான கதை என்றுதான் நான் கருதுகிறேன்.

உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

கவிதை,சிறுகதைகளை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

உங்கள் அக்கா தாட்சாயினியும் சிறுகதைகளை எழுதி வருகிறார். உங்களிடம் அவரது தாக்கம் வழிகாட்டல் எதாவது இருக்கிறதா?

அவர் சிறுகதைகளை எழுதியதால் சிறு வயதிலிருந்தே அவரது கதைகளை விரும்பி வாசிப்பேன். அதனால்தான் துணிந்து இலக்கியப்பரப்பினுள் காலடி எடுத்து வைக்க முடிந்தது. நான் எழுத முற்படும்போது அவரது ஆதரவு நிறையவே இருந்தது. நான் எழுதியதில் திருத்தம் செய்யவேண்டியிருந்தால் சுட்டிக்காட்டுவார். எனவே அவரது வழிகாட்டல் இருந்தது என்றுதான் கூறலாம்.

'பசியடங்கா இருளிலிருந்து' யாழ்பல்கலைக்கழக மாணவாகள் கதைத்தொகுதியில் உங்கள் 'உதிர்வு' என்ற இடம்பெற்றிருக்கிறது. உதிர்வு கதையி;ன் தாக்கம் குறித்தும் வடிவம் குறித்தும் சொலலுங்கள்?

'உதிர்வு' என்ற கதை சாதரண குறியீட்டுப்பாணியில் அமைந்த ஒரு கதை. இது எனது சொந்தக்கற்பனையில் உருவான கதை. இதில் எனது தாக்கம் என்று இல்லை. சாதாரணமாய் இருவர் காதல் என்ற ரீதியில் ஒன்றாய் சுற்றுகிறார்கள். அப்போதுதான் எனக்கு இப்படி ஒரு சிந்தனை உதித்தது. அவர்கள் ஒன்று சேருவது ஒரு புறமிருக்க தற்செயலாய் இப்படி ஒரு நிலைக்கு பிhரிக்கப்பட்டு தள்ளளப்பட்டால் அந்த பெண்ணின் நிலை பற்றியதாய்தான் இந்த 'உதிர்வு' என்ற கதை அமைகிறது.

போட்டிகள் பரிசுகளில் நீங்கள் கூடுதல் அக்கறை காட்டி எழுதுவதுபோல் தெரிகிறது. இது நமது சில மூத்த தலைமுறையினரிடமும் காணப்படுகிற செயல்பாடுதான் நல்ல படைப்புக்களை போட்டி பரிசுகள் நிராகரிப்பதாய் சொல்லுகிறார்கள். நீங்கள் இதில் அக்கறை காட்டுகிறீர்கள்.?

அதிகம் அக்கறை காட்டுவதில்லை. நேரம் கிடைத்தால் எழுதுவேன். போட்டிப்பரிசுகள் நிராகரிக்கிறதோ இல்லையோ அதற்கென எழுதுவதில் ஒரு வித ஆர்வம் மேலோங்குகிறது. நளும்பிக்கை ஏற்படுகிறது. எனவே போட்டிகள் புதிய தலைமுறைப்படைப்பாளிகளுக்கு தேவையான ஒன்று என்று தான் நான் கருதுகிறேன்.

கூடுதலாக கதைகளை எழுதியிருக்கிறீர்கள் அந்த சூழலையும் சில கவிதைகள் எழுதிய அனுபவத்தையும் பற்றி சொல்லுங்கள்.

நான் கதை,கவிதை எழுத முற்படும் போது சூழல் அமைதியானதாய் எனக்கு பிடிக்க வேண்டும். எனது ஆக்கங்களில் பெரும்பாலானவை கற்பனையின் வழிவந்தவை. சில பொதுவான நிகழ்வுகளின் வழிவந்தவை. குறித்த நேரத்தில் மனதில் எப்படி எழுத வேண்டும் என தோன்றுகிறதோ அப்படித்தான் எழுதுகிறேன். குறிப்பாக கனவு,பெண் ஆகியவற்றையும் உள்ளடக்கி எழுதினேன்.

நீங்கள் நான் இப்படி பேசுகிறோம். நாங்கள் இளையவர்கள். இந்த உரையாடல் மூலம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் தொடக்கத்தை செம்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறதா? அல்லது அதிகமான உரையாடலாக வெளித்தெரிகிறதா?

உண்மையிலேயே இதனை எனது தொடக்கத்தை செம்மைப்பத்தக்கூடிய உரையாடலானகத்தான் பார்க்கிறேன்.

நிரஞ்சனி நீங்கள் நல்ல செம்மையான எழுத்துக்களையும் வேறு எழுத்துப்பரப்பக்களையும் கண்டடைவதற்காக செயற்பட வேண்டியிருக்கிறது. அதற்காக உங்களை ஊக்கப்படுத்தி விடைபெறுகிறேன். நன்றி நிரஞ்சனி.

சில கேள்விகளுக்கு தெளிவாக நிரஞ்சனி பதில் தரவில்லை. குறிப்பாக அரசியல் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் அவர் விரும்பவில்லை. அவருடைய எழுத்துக்களைப்போல தீவிரமற்ற பதில்களுடன் அவருடனான சந்திப்பு அமைந்தது. பெண்ணின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படவேண்டும் அவளுக்குரிய மதிப்புகளும் இடங்களும் அவளிடம் கிடைக்கவேண்டும் என்கிறதாய் பேசியிருக்கிறார்.

Share with others