காதல் பூக்கும் காலம்
-- இசாக்

புதிதாக எடுத்ததாக
புகைப்படமொன்றை அனுப்பினாய்
அதை
பார்த்து இரசிக்க
என்னை
எப்போது அனுப்பி வைப்பாய்!

அடேய்
ஏதேதோ கனவுகளால் பின்னப்பட்டிருந்தன
பல இரவுகள்

நாம்
நேருக்கமாக சந்தித்துக் கொண்ட
அந்த இரவு
பார்வையிலேயே கழிந்தது
பார்த்தலே காதலில் இன்பமா.?

நீ தான் முதலில்
இல்லை நீ தான் முதலில் என
ஒரே நேரத்தில்
நாம்
கொடுத்துக்கொண்ட
தொலைபேசி முத்தங்களின்
வானலை சந்திப்புதான்
மின்னலோ.

நீயென்ன கடிவாளமா
உன் அறிமுகத்திற்கு பிறகான
பயணங்கள்
மிக இயல்பாக நிகழ்கிறது
எந்த சலனமுமற்று.

ஒரு பிறந்த நாளில்
வித்தியாசமான பரிசொன்று அளித்தேன்
உனக்கு.

நீ
உன் வாழ்வையே
பரிசாக அளித்தாய்
எனக்கு.

நாம்
நம் நேசிப்பின்
ஆழம்
அறிவதற்கான பயணத்தை தொடங்கினால்
அது
அடிவானத்தை தொடுவதற்கான
பயணம் போல.

[ விரைவில் வெளிவரவுள்ள காதல் பூக்கும் காலம் தொகுப்பிலிருந்து ]

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18 00:00
Share with others