மொட்டை உறக்கங்கள்
------------------------------
ரீங்காரமிடும் மின்விசிறியின்
தாலாட்டுடன் உறங்குவது சுகமே
ஆனாலும் மொட்டை மாடியை
மனம் மறப்பதில்லை

வானத்துக்கும் பூமிக்குமிடையே
மனிதன் எழுப்பிய சுவரைத்
தகர்த்தது போன்றதொரு மகிழ்வு

உறக்கம் வராத பொழுதுகளில்
நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்
நிலவில் நிழலாய் இருப்பது
பாட்டியா, முயலா அல்லது
பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்

மொட்டை மாடி உறக்கம்
கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது
மின்விசிறி உறக்கத்தில்
நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே
கனவுகள் கலைந்து விடுகின்றன
என் செய்வது?
அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட
என் இப்போதைய உறக்கங்கள் யாவும்
மொட்டை மாடியற்ற
மொட்டை உறக்கங்களாகி விட்டன

-ஜெ.நம்பிராஜன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-09 00:00
Share with others