தப்பு... காலம்
--------------------

1. தப்பு

தப்பாமல் அவ்வப்போது
தப்புகள் செய்திருக்கிறேன் நான்
சிறு வயதில் செய்த தப்புகள்
சிரிக்க வைக்கும்
இப்போது நினைத்தாலும்
அப்போது செய்த தப்புகள்
வேடிக்கையாக செய்தவை
வேண்டுமென்றே பல தப்புகள்
இப்போதும் செய்கிறேன்
தப்புத்தப்பாக தப்பு செய்து
அகப்பட்ட தருணங்களும் உண்டு
அப்போதெல்லாம்
தப்பு செய்யக் கூடாது
என்று தோன்றியதே இல்லை
தப்புத் தப்பாக
தப்பு செய்யக்கூடாது
என்று மட்டுமே தோன்றியது

2.காலம்

காலத்தைத் துரத்தித் தோல்வியுறுவதே
காலத்தின் கட்டாயம் போலும்
எது எப்படி இருப்பினும்
காலம் காலம் தாழ்த்தாது
தன் கடமையைச் செய்து விடுகிறது
காலத்தைக் கைப்பற்றுவதை விட
காலத்துடன் பயணிப்பதே எளிதாயிருக்கிறது
இருப்பினும்...
இழந்த நாட்களின் வலியிலும்
நிகழும் நாட்களின் பயத்திலும்
வரும் நாட்களின் கனவிலுமே
காலம் பெரும்பாலும் கழிந்து விடுகிறது

-ஜெ.நம்பிராஜன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-09 00:00
Share with others