என் நுழைவின் பின்
தானே அடைத்துக் கொள்ளும்
தானியங்கிக் கதவுகள்
என்னை பயங்கொள்ளச்
செய்கின்றன.
திறந்து வெளியேறவோ
சிறு ஆசுவாசம் செய்து
கொள்ளவோ தேவைப்படும்
அடையாள இலச்சினை
எந்த நேரமும் தொலைத்துவிடும்
பயத்தோடே இயங்குகிறேன்.
பொருட்களை இடம்மாற்றி
வைக்கிறேன்
புறப்படும் முன்
எடுக்க வேண்டியவற்றை
பட்டியலிட்டு எழுதியும் வைக்கிறேன்
நேர்த்தியாக திட்டமிடுகிறேன்
பின்னும் தீர்வதில்லை சந்தேகங்கள்
எல்லாம் முடிந்த பின்
இங்கிருந்து செல்ல முடியுமா?
செல்லும் முன் எல்லாம்
சரியாக முடிந்துவிடுமா
கதவுகளோ அடையாள இலச்சிகளோ
அதன் நியாயங்களை செய்த
வண்ணமே இருக்கின்றன
என்றாலும் சந்தேகங்கள்
என்னோடே பயணிக்கின்றன
அனிச்சையாய் சுழலும் சுவாசம் போல.