நெருப்புப் பூக்கள்
  - கல்லடி றொபட்
'நெருப்புப் பூக்கள்' 
-   முல்லை அமுதன்.

ஈழத்துக்கவிதை உலகின் இன்னொரு விசையை கல்லடி றொபட் எழுதியுள்ள
'நெருப்புப் பூக்கள்' எனும் கவிதைநூல் எமக்குத் தந்துள்ளது. ஈழத்து போர்ச்சூழல், கைது, காணாமல் போதல், பாலியல் வன்முறை இன்னோரன்ன பிற இழப்புக்களின் மத்தியில் தனிமனித உணர்வுகள் எழுச்சிபெற்று படைப்பாக்க முயற்சியாக வந்து விழுவதைப் பார்க்கிறோம்.

'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும் கவிதை நூலை 2005ல் வெளியிட்ட கல்லடி றொபட் 2000 ஆண்டு முதல் பூசா முகாமில் கைதியாக விசாரனையின்றி இருப்பதின் சோகம் அவரின் கவிதைகள் ஊடாக நமக்குப் புரிகிறது.

தமிழக சிறையில் இருந்து கொண்டே படைப்பாக்க முயற்சிகளை வெளிக்கொண்டுவரும் சாந்தன் அவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்

1983 ற்குப் பிறகான இளைய தலைமுறையினருக்கிடையே வீச்சாக வந்த போராட்ட உணர்வு ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலை ஏற்பட்டது. அதன் வளர்ச்சியின் புதிய பரினாமமாக இன்றைய போர்க்கால இலக்கியமுமாயிற்று.

1977 ல் மட்டக்களப்பில் பிறந்த றொபட் தான் பிறந்த ஊரான கல்லடியையும் இனைத்து எழுதி வருகிறார். இவரின் ஆக்க இலக்கியத்திற்கு ஈழநாதம், மட்டக்களப்பு ஈழநாதம், உதயன், சுடரொளி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. இவரின் கவிதைகளை ஒருமுகப்படுத்திப் பார்க்கும் போது ஒரு புதிய பரிமானமாய் நகர்வதைக் காணக்கூடியதாக உள்ளது. சிறீலங்கா வதைமுகாம் ஒன்றினுள் வதைபடும் அவலங்களின் சோகத்துடன் எழுதும் போது வாசகனை சிந்திக்கவும் உணர்ந்து கொள்ள வைக்கவும் முடிகிறது.

'எத்தனை எத்தனை

கொடுமைகள்

எத்தனை எத்தனை

அவலங்கள்

தாங்க முடியாத

வேதனைகளுக்குள்

தத்தளிக்கிறதே எம்மினம்

இன்னும் ஏன் பொறுமை

காத்துக்கொண்டிருக்கிறீகள்'

இப்படித் தொடர்கிறது இறுதிமூச்சு எனும் கவிதையில்


'படகேறி

நீ விரும்பிய இடத்தில்

மீன் பிடிக்கலாம்

கட்டுப்படுத்த

யாரும் இருக்கமாட்டார்கள்

உன் வயல் நிலங்களில்

முற்போகம் செய்யலாம்

மிதி வெடிகளை விதைக்க

யாரும் வரமாட்டார்கள்'

அனைத்தும் சுதந்திர தமிழ் ஈழத்தில் அனுமதியுண்டு என நண்பனை விழிக்கிறார். இது எமக்கும் பொருந்தும்.

வார்த்தைகளைக் கோர்க்கின்ற விதம் அலாதியானது. அது களத்தில் நிற்பவர்களுக்கு நிறையவே உண்டு. வலிகளின் வடுக்கள் றொபட்டிற்கு அதிகம் இருப்பதால் அவரின் கவிதைகளின் பார்வை அல்லது ஆழம் எம்மை ஊடுருவிச் செல்கிறது.

கருணாகரன், த.அகிலன் , சுபாஸ் சந்திரபோஸ், முல்லைக்கோணேஸ், முல்லைக்கமல், ஹரிகர சர்மா, வீரா, த.மலர்ச்செல்வன், மஜீத், ரஸ்மி போன்றோரின் வரிசை தற்போது அதிகமாகிறது.

திசைகளைத் தொடுகின்ற முயற்சி ஈழத்துக்கவிதைகளில் அதிகம். தனது விடுதலைக்கு மேலாக நாட்டின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு கவிஞனின் கவிவரிகள் சொல்லுகின்ற சேதிகள் எம்முன்னால் வேண்டுகோள்ளாகவும் வைக்கப்பட்டுள்ளன. துடைத்தெறிந்துவிட முடியாது.

இந்நூல் வெளிவருவதில் பலருக்கு பங்குண்டு. இயல் விருதுபெற்ற திரு. பத்மநாப ஐயர் முதல் கொண்டு கவிஞர் கி.பி.அரவிந்தன் ஊடாக சுவிஸ்
'நிலவரம்' பத்திரிகைக்குழுவினர் வரை விரிகின்றது.

சுவிஸ்சிலும் ஜேர்மனியிலும் வெளியீடு கண்ட இந்நூல் பலரின் பார்வைக்குக் கிடைப்பதில் பெருமையாகவும் இருக்கிறது. புலம் பெயர்ந்தோர் தம் வாழ்வுக்கான வழித்தடங்களைத் தொலைத்தவர்கள். ஆனால் களத்தில் நிற்பவர்கள் உயர்ந்தே நிற்கிறார்கள். சோகத்தினையும் சுகமாக்கி புதிய புதிய வடிவமாய்.. அவர்கள் போராளிகளாய். படைப்பாளிகளாய்


வாழ்த்;துரை, வாழ்த்துச்செய்தி, ஆசிச்செய்தி எனும் பங்களிப்புகளுக்கப்பால் விடுதலைத்தீ எனும் கவிதை தொடக்கம் ஒவ்வொரு கவிதைகளுக்கு ஏற்ற தலைப்புகள் இடப்பட்டு தேசியத்தலைவனை வாழ்த்துகிறோம் எனும் கவிதைவரை கணினி இடல், அச்சிடல் என்பவற்றில் தீவிர கவனம் எடுத்து பிழையின்றி அழகிய வடிவத்தில் அச்சிட்டுள்ளார்கள்.

சர்வ வல்லமையுள்ள உலக அரசுகள் இன்னமும் விடுதலைப்போராட்டத்திற்கு வரைவிலக்கணம் தரத் தவறிவிட்டன.

உன்

தொண்டைக் குழியை

நெரித்துக் கொண்டே

சமாதானம் பேச

அழைப்பேன்

நீ சம்மதிக்க வேண்டும்

நீ மறுத்தால்

உன் மீது

பயங்கரவாதி

முத்திரை குத்தி

சர்வ தேசத்தின்

முன்

இழுத்துச் செல்வேன்

இரத்தம்

சொட்டச் சொட்ட'

என பயங்கரவாதி எனும் கவிதையில் சொல்கிறார்.

தனி மனிதன் மீது அல்லது சமூகத்தின் மீது வன்முறைகள் அதிகரிக்கும் போது அது வெடித்துப் புயலாய் எழும். அரச இயந்திரம் தன் பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்து விட்டு தனிமனிதனை அல்லது சமூகத்தினை பயங்கரவாதிகளாக்கும் அல்லது பயங்கரங்கள் செய்யத் தள்ளிவிடும். எம் ஈழப்போராட்டமும் அப்படியே. சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு எமக்கான விடிவு வராதா? என்கிற ஏக்கம் பலரிடம் இருந்தது. மாறாக உலக நாடுகளின் சதிமுயற்சி சிறீலங்கா அரசின் பாசிசவாதத்திற்கு துணைபோக சமாதானம் பொய்யாகிப் போனது. இதுவே கவிஞனின் மனதில் இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. இங்கு றொபட்டிடமும் நிறையக் கனவுகள், ஏக்கங்கள், சமாதானம், விடுதலை, சுபீட்சம் என்கிற பிராத்தனைகள் உள்ளது என்பதை அவரின் அனைத்துக் கவிதைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

வலிக்கவில்லை என்றால் மனிதர்களே இல்லை.
சொகுசாய் வாழ்கின்ற நாம் எனியாவது திரும்பிப் பார்த்தால் றொபட்டின் கனவுகள் ஜெயிக்கும்.

சிங்களன் பூமி பொடிபட எம் மண்ணின் புழுதியில் புதிய விதைகளாய் றொபட்டின் கவிதைகளையும் விதைப்போம்.(6.4.08)
படிக்க :-
நிலவரம் (சுவிஸ்)


swiss media house. post fach 7413, laupenstrasse 37, CH 3001, Bern, Switzerland.
வார்ப்பு
www.vaarppu.com
February 20, 2018