விடைகொடல்
  - ரவி (சுவிஸ்)
  விடைகொடல்
---------------------

இளவேனிற்காலம் தன்
சக்தியெல்லாம் திரட்டிப்
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்
பச்சையாய் விரிய முயற்சித்த
ஓர் பொழுதில்
நீ மட்டும் ஏன்
உதிர்ந்து விழுந்தாய்?

சூர்யா!
நீயாய் விரிந்துகொண்டிருந்த
விடலைப் பருவமதில்
காற்று நெருப்பை உமிழ்ந்ததடா
தளிர்களெலாம் கருகிடவும்
இளம்பச்சை ஈரம் உலர்ந்திடவும்
நீ உயிர் உதிர்ந்து கிடந்தாய்.
தாங்க முடியவில்லை.

இடிபோல் இறங்கிய உன்
மரணச் செய்தி
இதயத்தின் அடி ஆழத்தில்
அடிக்கப்பட்டுவிட்டது.
வாழ்வில் நீ எழுத இருந்த
எல்லா அத்தியாயங்களையும்
எம் கற்பனைக்குள் திணித்தபடி
ஒரு யுகமாய் எம்முள்
அழுத்துகிறாய்.
ஜீரணிக்க முடியவில்லை
துவண்டுபோகிறோம் நாம்.

உடல் உதிர்த்திய சருகுகளாய்
கிடக்கும் உனது ஆடைகளும்
உனது பாதத்தை எதிர்பார்த்து
வாசலில் வாய்பிளந்தபடி
காத்திருக்கும் சப்பாத்துகளும்
உன் கைபடாமல்
மூடப்பட்டுப்போயிருக்கும்
புத்தகக் குவியல்களும்
மைதானம் காண
உனக்காய்க் காத்திருக்கும் கால்பந்தும்
சாப்பாட்டு மேசையில்
காலியாகிப்போயிருக்கும்
ஓர் இருக்கையும்
எல்லாமுமே
கால முதிர்வில்
எமைவிட்டுப் போய்விடலாம்.
ஆனாலும்
எல்லாவற்றையும் தாண்டிய உன்
வீடுகொள்ளா இயங்குதலின்
நினைவுகள் எமைவிட்டுப் போயிடா.
ஒரு மகனாய்
சகோதரனாய் நண்பனாய் நீ
உலவிய பொழுதுகளின்
நினைவுகள் அவை.
எப்படி மறத்தல்கூடும்?

எமைப்படர்ந்த சோகத்தை
கரைத்துவிட
நீர் கொள்கிறது கண்கள்.
நாம் அழுகிறோம்
வாய்விட்டு அழுகிறோம்
துவண்டுபோன உடலும்
சாய்ந்துபோன மனமும்
இறுகிப்போய்விட்ட நரம்புகளும்
எல்லாமும் இயல்புபெற்று
எமை மீட்கும்வரை
நாம் அழுவோம்.

கண்ணீர்த் துளிகளினூடு
பார்வைப்படுகிறது
உலகம் கோணலாய்.
அதிர்ச்சியைப் பரிசளித்தபடி
எம்மிடமிருந்து
விடைபெற்றுப் போகிறாய் நீ
ஆற்றாமையின் உச்சியில் நின்று
சொல்கிறோம்,
போய்வா சூர்யா, போய்வா!
காலம் உன்
நினைவுகளைப் பொறுப்பேற்க
அதனோடு நாம்
இயங்கியபடி இருப்போம், போய்வா!

(தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக இந்தக் கவிதை)
வார்ப்பு
www.vaarppu.com