மழை மழையாய்
  - அசன்பசர்

மழை மழையாய்...புதியமாதவி, மும்பை."கடை வீதிக்கு வந்தாயிற்று. தண்ணீர்ப் பொட்டலங்களும் காற்றுப் பொட்டலங்களும்
வருவதற்குள் விழிப்போம். இயற்கையாவோம். நீளும் கரங்கள் கோத்துத் தோப்பாவோம்.கூட்டிசைப்
பாடல்களால் பறவைகளாவோம். ஆயிரமாயிரம் நூற்றாண்டுகளைத் தாண்டிய பேத்திகளூக்காகவும் பேரர்களுக்காகவும்
மண்ணை-வானத்தை.. தூய்மை செய்து ஞாயிற்றுக் கிண்ணத்தில் மழையூற்றி வைப்போம்.
மழையருந்தி மழையருந்தி மழையாவோம். நம் எல்லோருக்குமான பாடலை மழை பாடும். மழைக்கான
பாடலை நம் பாடுவோம்" மழை மழையாய் எழுதவரும் கவிஞர்களைப் பற்றி தன் கடைசி மழைத்துளி
கவிதை நூலில் எழுதினார் கவிஞர் அறுவுமதி.கவிஞர்கள் காசி ஆனந்தன், வண்ணதாசன், ஆதி மூலம், அறிவுமதி..வரிசையில் இதோ இன்னொரு
மழைத்துளி.. கவிஞர் அசன்பசர்.மழையில்லாத மண்ணில் பணி நிமித்தம் வாழும் வாழ்க்கைச் சூழலில்தான் நெருப்பாகத் தகிக்கும்
பாலைவனச்சூட்டில் தன் காதலை, தன் காதலியை, தன் மண்ணை, தன் மனிதர்களை, தன் வானத்தை
எல்லாம் வசப்படுத்தும் தீராத வேட்கையில் கவிதை எழுதி தன் உணர்வுகளை ஈரப்ப்படுத்திக்
கொண்டிருக்கும் கவிதைகள்தான் கவிஞரின் "மழை மழையாய்" கவிதைகள்.கவிதைகள் அனைத்தும் துளிப்பாக்கள். ஒவ்வொரு துளிப்பாவிலும் ஒரு காதலின் குறுந்தொகைக்
காட்சி." ஈரமண்ணில்

கோடு கிழித்து

சில்லெறிந்து

மேலே பார்த்துக்கொண்டே

சரியா.. சரியா..

சரியா.. என்று

கேட்டு வருகையில்

உனது நெற்றியில்

பொட்டுவைத்து

அழகுபார்த்தது

மழைத்துளி
"


(பக் 58)

காதலை உடல் வர்ணனையாக, மழையில் நனைந்து அரைகுறை ஆடையுடன் காம வெறியின் அரிச்சலைத்
தீர்க்கும் அரைகுறை காட்சிகளாக, விற்பனையாக்கிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்
இவர் மழையில் நனையும் காதல் கவிதைகள் மயிலின் இறகுகள் போல இதமளிக்கின்றன.காதலியை முத்தே மாணிக்கமே என்றுன் வர்ணிக்க நினைக்கும்போதுகூட

" நேராக

சிப்பியிடம்

விழுந்த

மழைத்துளிதான்

முத்தாகுமாமே

உன்

தாயிடம்

கேட்க வேண்டும்
"என்று மழைத்துளியின் முத்தாகவே காட்டியிருக்கும் கற்பனையைப் படிக்கும்போது கவிஞர் அசன்பசரின்
உள்ளம் "மழை நனைக்கும் உள்ளம்" என்று அறிவுமதி சொல்லியச் சொல் அர்த்தமுள்ளதாகிறது.மழை, காதல் மட்டுமல்ல. காதலுக்கு அப்பாலும் மழை நனைக்கும் மண்ணை இவர் கவிதைகள் குடைப்பிடிக்கின்றன."எனக்குத்தான்

அனுமதியில்லை

என்று நினைத்தேன்

என் குடிசையில்

வடிந்த

மழைநீர்

கோயில்

வாசலில்தான்

தேங்கியிருக்கிறது
"


(பக் 30)

" நீ மட்டும்

மேல்சாதி

என்கிறாய்

என் கால்பட்ட

மழைநீர்தான்

நீ குளிக்கும்

கால்வாயில்

ஓடுகிறது
"


(பக் 32)என்று சாதியக்கொடுமைகளைத் தாக்கும் புயல்மழையாய் வீசுகின்றன இவர் கவிதைகள்.இன்றைய கவிஞர்கள் அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமானச் சட்டங்களை எதிர்த்துக் குரல்
கொடுக்கத் தயங்குவதில்லை. மதமாற்ற தடைச் சட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டவுடன்
கவிஞர்களும் இன உணர்வாளர்களும் அதன் முகமூடியைக் கிழித்து எறிந்தார்கள். (தற்போது அந்தச்
சட்டம் திரும்பப்பெறப்பட்டுவிட்டது.. வேறுபல அரசியல் காரணங்களால்)" உப்புநீரின்

மதமாற்றம்

மழைநீர்

தடைச்சட்டம்

தடுத்ததால்

மீண்டும்

கடலுக்கு
"
இக்கவிதையில் மழைநீர் கடலில் சங்கமம் ஆவதை நிகழ்கால அரசியலுடன் ஒப்பிட்டுப்
பார்க்கும் பார்வை மழைநீர் கனவுகளில் கார்மேகங்களுக்கு நடுவில் மேக மூட்டத்தில் சஞ்சரித்தாலும்
கவிஞனின் பார்வையும் இருத்தலும் நிகழ்காலத்துடன் கலந்தே இருப்பதைக் காட்டுகிறது.கோவில் சிலைகளை எதிர்த்துக் குரல் கொடுத்த தமிழ் நாட்டில் அறிந்தோ அறியாமலோ
சிலை எடுக்கும் நாகரிகத்தை பரப்பிவிட்டோம். எந்தச் செயலும் அளவுக்கு மீறும்போது சமூகத்தில்
சில எதிர்வினைகளையே விதைக்கிறது. இன்று தமிழ்நாட்டில் சாலைக்கு ஒரு சிலை. யாருக்கு
சிலை வைக்கிறோம் என்பதல்ல முக்கியம். இத்தனைச் சிலைகள் தேவைதானா? என்ற கேள்வி
சாலைகளின் சந்திப்பில் பயணிக்கும் அனைவருக்கும். பெரும்பாலான ஊர்களில் இந்தச் சிலைகளே
பெரும் கலவரங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. இதை எல்லாம் உள்வாங்கிக் கொண்ட கவிஞரின்
கவிதை" எவனோ

சிலையின்

முகத்தில்

கரிபூசிவிட்டான்

விடிய விடிய

பெய்த மழைதான்

தடுத்தது

பெரும்கலவரத்தை..
"(பக் 52)

என்று மழைநீரைக் காரணமாக்கி 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுகிறது. சிலைகளில் கரிபூசிய
சுவடுகளைக் கழுவிய மழை சாதிக்கொடுமையால் முந்திரிக்காட்டுக்குள் ஓடி மறையும் காதலர்களில்
கால்தடங்களையும் காட்டிக்கொடுக்காமல் அவசர அவசரமாய் அழிக்கிறதாம்! (பக் 56)மழையின் உறவை தனதாக்கிக் கொள்ள மண்ணாகப் பிறக்கவேண்டும் என்று ஆசைப்படும் கவிஞர்
உள்ளம் காதலியின் முத்தத்தைக்கூட மழை இரவில் மின்னல் என்று உணரும்போது கவிதை மழையில்
காதல் மின்னல்.. பளிச் பளிச் என முகம் காட்டத்தான் செய்கிறது.காதல் உணர்வுகளை மழையாகவே காணும் கவிஞனிடன் தமிழ்ச்சினிமாத்தனமான ஒரு கற்பனை சற்று
நெருடலாகவே இருக்கிறது என்பதை சொல்லியே ஆகவேண்டும்." மழையே

சாலையை

நன்றாகக்

கழுவி விடு

பூப்பெய்தியபின்

என்னவள்

பூமியில்

கால் வைக்கிறாள்
"


(பக் 36)"பூப்பெய்திய பூக்களுக்கு

வாத்திய இசையுடன்

நீராட்டு விழா

ஒரு மழைநாளில்
"


(பக் 22)பெண்கள் பூப்பெய்தியவுடன் நடத்தும் பூப்புனித நீராட்டுச் சடங்குகள் ஒழிக்கப்பட்டக் காலம்.
பெண் பூப்பெய்துவது ஆண் வயதுக்கு வருவது போல ஓர் உடல்ரீதியான வளர்ச்சிதான். என்னவோ
அவள் பூப்பெய்தியவுடன் நாணப்படுவது போலவும், காதல் கொள்வது போலவும் வெள்ளை உடையில்
தேவதைகள் அவளை ஊஞ்சலில் வைத்து பொன்னூஞ்சல் ஆட்டுவது போலவுமான சினிமாத்தனமானக் கற்பனைகள்,
எண்ணங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும்.பக்கத்திற்குப் பக்கம்..அற்புதமான புகைப்படங்களுடன் கவிதைகள்..நேர்த்தியான அச்சுக்கோப்பு..மழை
மழையாய்..தமிழ்க்கவிதை வானில் துளிப்பாக்களின் குடைவிரிப்பு. மழைக்கே குடைவிரிக்கும்
அசன்பசரின் கவிதைகள் மழைக் காலத்தில் மட்டுமல்ல..மழையின் நினைவுகள் வரும்போதெல்லாம்
நினைவில் வந்து நனைத்து ஈரமாக்கும்.

கவிதை நூல்: மழை மழையாய்.

கவிஞர் : அசன்பசர்.

வெளியீடு : கவிமதி, புதுச்சேரி.

kavimathi@yahoo.comபக் : 62, விலை- ரூபாய்: 20/ 
வார்ப்பு
www.vaarppu.com
January 22, 2018