ஒரு கணப் பொழுதில்...!

இக்கணம்
எங்கேனும் ஒரு மூலையில்
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்
சமுத்திரத்தில் வீழ்ந்து
சங்கமமாகியிருக்கலாம் !

இக்கணம்
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் ,
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் ,
எறும்பூரக் கற்குழிந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

இக்கணம்
ஏதோவோர் எல்லையில்
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,
மரமொன்று வேருடன்
வீழ்ந்திருக்கலாம் !

இக்கணம்
இதழ் விரிக்கும் - எனதிந்தக்
கவிதையைப் போல
யாரேனும் ஒரு தாய்க்கு
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து
'அம்மா' என்றழுதிருக்கலாம் !

இக்கணம்
எங்கேனுமொரு மூச்சு
நின்று போயிருக்கலாம் ,
எங்கேனுமொரு மூக்கு
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் !

புயலடித்து ஓய்ந்த கணம்,
பூகம்பம் வெடித்த கணம்,
முதல் தூறல் விழுந்த கணம்,
மழை நின்று போன கணமென
ஒரு கணத்தில்
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் !

அந்நியனின் ஆக்கிரமிப்பில்
வதைப்பட்டு,
வாழ்விழந்து,
அனாதையாகி , அகதியாகி,
தாயொருத்தி பிள்ளையிழந்து,
தாரமொருத்தி விதவையாகி
விம்மியழும் ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த
கணமாகவும் இது இருக்கலாம் !

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

* ஷஹீத் - யுத்த களத்தில் மரணமடையும் வீரன்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02 00:00
Share with others