இதயங்கள் தேவை !

பூத்திருந்த பூவொன்று
செடிவிட்டுக் கழன்று
புல் மீது விழுந்தென்னெஞ்சில்
தீப்பற்ற வைத்தது !

கூட்டிலிருந்து
காகம் கொத்திச்
சொண்டகன்று
நிலம் வீழ்ந்தென்
கரண்டிப் பால் நக்கிப்
பின்னிறந்த அணில்குஞ்சு
என்னிதயத்தில்
அமிலமள்ளிப் பூசியது !

பாதை கடக்கமுயன்று
கண்முன்னே கணப்பொழுதில்
மோதுண்டு மரணித்த தாயும்

குருதிக்கோடுகளைச்
சிரசில் ஏந்தி,
லேசான புன்னகையை
முகத்தில் கொண்டு
பெற்றவளின்
கரத்திலிருந்திறந்த
கைக்குழந்தையும்
என்னுள்ளத்தைச்
சிலுவையிலறைந்தனர் !

நம்பவைத்து நயவஞ்சகனாகிய
நண்பனும்,
உரிமையெடுத்து உருக்குலைத்த
உறவினரும்
என்மனதைக் கழற்றியெடுத்துக்
கூர்ஈட்டி குத்திக்
கொடூரவதை செய்தனர் !

புராணக்கதைகளில் போல
படைத்தவன் முன் தோன்றி
வரம் தரக்கேட்பானெனின்,
செத்துப்பிழைக்க-எனக்குப் பல
இதயங்கள் வேண்டுமென்பேன்...
இல்லையெனில்-உடம்புக்குப்
பாரமெனினும்,
எதையும் தாங்கும்
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-11 00:00
Share with others