வீடு திரும்பல்
01.
வீடு திரும்பல்
-----------------
மாமரமும்
செவ்வந்தியும் சுற்றி நிற்க
துளசிசெடி அருகில்
நிலவும் கூட வரும் அந்திகளில்...
இருந்தது எனக்கொரு வீடு
சமயற்கட்டில் அம்மாவும்
தோட்டத்தில் அப்பாவும்
கத்த கத்த நிற்காமல்
ஊர்சுத்தி திரும்பி வர
இருந்தது எனக்கொரு வீடு
அந்தி வரும்.
ஜன்னல் ஓரம் - அங்கே
வானில் ஒரு நிலவு வரும்
எதிர்வீட்டில் ஒரு நிலவு வரும்
வானம் நிரம்பிய தாரகைகளாய்
தங்கையும் பட்டாளங்களும்
நிரம்பிய அந்த அந்திப் பொழுதுகளில்
நான் வீடு திரும்ப
இருந்தது எனக்கொரு வீடு
ஓரு விடியலின் பிறப்பில்
இறந்துபோன
என் அந்திப்பொழுதுகளை
எனக்குணர்த்த போதாது
தீராத பொழுதுகளின் வதை
சுமந்த முகாம் குடிசைக்குள்
வந்துபோன விடியல்கள்
கடைசியாய்
சொல்லிப் போனார்கள்..
தோட்டாக்கள் துளைத்த
துவாரங்கள் போக
வீடும் கூரையும்
துளிசிசெடியும் கூட
இன்னமும் இருக்கிறதாம்
வீடு; திரும்ப நேருகையில்
அங்கே கவிந்து கிடக்கும் போலும்
எனக்கான இரண்டாவது
வதைமுகாம்
02.
தாய்மண் வலி
-------------------
புலன்களுக்குள் புகுந்து
இமைகள் பிரித்து
கனவுக் கதவுகளின் வழி நடந்து
கறுப்பு வெள்ளைக் கனவுகளையும்
சிவப்பாக மாற்றி
இரவுகளும் அலைக்கழிந்து
உணர்வு நரம்புகளை
உழுதெடுக்க...
இறந்தேன் என்று அலறி
எழும்புகையில்...
சாத்தானைப் போல
அடுத்தநாள் புலர்கையிலும்...
கட்டிலின் ஓரத்தில்
எனக்கு முன்னதாய்
எழுந்து குந்தியிருக்கிறது
எங்கள் வலி.
02.