துயர் துடைக்கும் விரல்கள் கொடு !
---------------------------------------

இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...

அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !

தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!

மாய உலகின் கரங்களை விலக்கி
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்
தூதனுப்புகிறேன்
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்
குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!

சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !

அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-26 00:00
Share with others